புதுதில்லி:
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) ஆதரிக்காத மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. கேரளம் உள்ளிட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் மாநிலங்களுடன் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்த மாநிலங்களின் அச்சத்தைப் போக்கி மத்திய அரசுடன் ஒத்துழைக்கச் செய்வதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.பி.ஆர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் இன்னும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை. எனவேதான் மத்திய அரசு அத்தகைய மாநிலங்களுடன் விவாதிக்கவிருக்கிறது.நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்பிஆர் தரவு சேகரிப்புக்குபதிவாளர் ஜெனரலாகவும் இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் பொறுப்பேற்கிறார். அதனால்தான் இந்த உயர் அதிகாரியை நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நியமனம் செய்ய உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம், அதன் அடிப்படையில் தகவல் சேகரிப்பதற்கான தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்க முடியாது என்று அறிவித்ததோடு எதிர்க்கட்சியின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் ஒரு கூட்டு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளா ஆகும். அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் மாநிலங்களும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவை இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில், தேசிய குடியுரிமை பதிவுதரவுகளை சேகரித்து தொகுக்கும் பணி தொடங்க வேண்டும். கடுமையான போராட்டங்களை அடுத்து, பெற்றோரின் பிறப்பிடம் உட்பட என்பிஆரில் உள்ள சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.