திருச்சிராப்பள்ளி, ஏப்.28-திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் தாலுகா மாதவபெருமாள் பஞ்சாயத்தில் செயல்பட்டு வந்த ரீச் கடந்த பிப்.10ம் தேதி மூடப் பட்டது. இதனால் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர்.எனவே மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் ரீச் திறக்கக் கோரிகடந்த பிப்.22ம் தேதி திருச்சி சுப்ரமணியபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்ச்4-ம் தேதி லால்குடி தாலுகா அரியூர்,திருவெறும்பூர் தாலுகா கீழமுல்லைக் குடி ஆகிய இடங்களில் மணல் மாட்டுவண்டி ரீச் திறப்பது. 20 நாளுக்குள்கொண்டையம்பேட்டை, முருங்கப் பேட்டை, பெட்டவாய்த்தலை ஆகிய இடங்களில் மணல் ரீச் திறப்பது என முடிவானது. ஆனால் இதுவரை மணல் ரீச்திறக்கப்படவில்லை. மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏப்.20ம் தேதிக்குள் மணல் ரீச் திறக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இம்முறையும் மணல் ரீச் திறக்கப்படவில்லை. எனவே 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்காததை கண்டித்து ஞாயிறுஅன்று சர்க்கார்பாளையம், கம்பரசம்பேட்டை, முருங்கபேட்டை உள்பட 20 கிராமங்களில் மணல் மாட்டு வண்டிதொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து திங்கள் கிழமை ஆட்சியர் அலுவலகம் அருகில்கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத் தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.