tamilnadu

img

கார்ப்பரேட்டுகளின் கண்ணை உறுத்தும் பொதுத்துறை - தி.ஜெயசங்கர்

இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டு கள் கடந்து விட்டது. இன்னும் நாம் வளரும் நாடுகள் என்ற பட்டியலில் இருந்து மாறவில்லை. சுதந்திரம் பெற்ற இந்திய நாடு இன்றும், கல்வி, வேலை, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் அனைவருக்கும் வீடு என்ற அடிப்படை விஷயங்களை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நாடாக இருந்து வருவதற்கு யார் காரணம்? நமக்கு பின்னே சுதந்திரம் பெற்ற நாடுகள் நம்மை விட வேக மாக முன்னேறி இருப்பதற்கு யார் காரணம்? இந்தியாவை 73 ஆண்டுகள் ஆண்ட வர்கள், ஆண்டு வருபவர்கள் முதலாளி வர்க்கம் என்று இந்த தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் சொன்ன  போது எள்ளி நகை யாடியவர்கள் இன்று எல்.ஐ.சி-யின் பங்கு களை விற்க துணிந்த போது புரிந்து கொண்டார் கள். ரயில்வேயை தனியாருக்கு விற்ற போது புரிந்து கொண்டார்கள். பொதுத்துறைகள் அனைத்தும் அம்பானிக்கும், அதானி வகையறாக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற அரசின் முடிவு என்பது அரசு முடிவல்ல, அரசை கைப்பாவையாக ஆட்டிப்படைக்கும் முதலாளிகளின் முடிவு. அந்த முடிவை அம லாக்க முனைகின்றது மத்திய அரசு. 

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்க ளை இன்று இந்திய பெரு முதலாளிகள் வாங்க ஆர்வமுடன் உள்ளனர். இவ்வளவு பெறும் தொகை இவர்களுக்கு எப்படி கிடைத்தது. 1991-இல் போடப்பட்ட காட் ஒப்பந்தம் மூலமாக தடையற்ற வியாபாரம் உலகம் முழுவதும் வியாபாரம் என்ற வகையில் முதலாளிகள் தனது மூலதனத்தை பன்மடங்கு பெருக்கிக் கொண்டனர். அத்துடன் அரசின் வரிச்சலுகைகள், வராக் கடன் தள்ளுபடி மூல மாக பல லட்சம் கோடிகள் அவர்கள் பயன் பெற முடிந்தது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த சலுகைகள் தொடர்கின்றது என்றால் இந்த அரசு மக்களுக்கான அர சல்ல, மக்களை எப்போதும் ஓட்டாண்டிக ளாக வைத்துக் கொண்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் பினாமி அரசு என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்திய முதலாளிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. கார்ப்பரேட் தொழிலதி பர்கள் உலக முதலாளிக்கு இணையாக சொத்து சேர்க்க முடிந்தது. அதனால் இந்தி யாவின் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பன்மடங்கு இலாபத்தை ருசிக்க முனைகிறது. அதன் ஆசைக்கு லாவகமாக வாலாட்டுகின்றது மத்திய அரசு. இந்தியாவின் நவரத்தினங்கள் என்று சொல்லப்படும் ரயில்வே, பிஎஸ்என்எல், பெல், எண்ணெய் நிறுவனங்கள், இரும்பு எஃகு ஆலைகள், இன்சூரன்ஸ், நிலக்கரி போன்ற லாபம் கொழிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விட முயல்கிறது. மத்திய அரசு இந்தியாவின் ஏர்லைன்ஸ் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி அதை 100 சதம் தனியாருக்கு தர முடிவெடுத்துள்ளது. சுமார் 87 ஆண்டுகளாக இந்திய அரசின் கையில் இருந்து வான்வழி போக்குவரத்து இனி டாடாவின் கைக்கு செல்லவிருக்கின்றது. அதன் 89,000 கோடி கடன்களை 23,286 கோடி கடன்களாக குறைத்து கொடுக்க முடிவு செய்துள்ளது. மக்கள் பணத்தை முதலாளிக்கு கொடுக்கவா மத்திய அரசு, அதற்காகவா நாம் வாக்களித்து அமரச் செய்தோம்?

வெறும் 5 கோடி மூலதனத்தில் தொடங்கிய எல்ஐசி இன்று இமாலய வளர்ச்சியை அடைந்துள்ளது. 40 கோடி பாலிசிதாரர்கள், நட்டத்தை கண்டிராத நிறுவனம், சிறந்த சேவை நிறுவனம் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட நிறுவனம், இதன் உபரி நிதி மட்டும் 53,211,91 கோடிகள். இதன் சொத்து மதிப்பு 32 லட்சம் கோடிகளாகும். எல்ஐசி கடந்த நிதியாண்டில் டிவிடென்ட் ஆக மட்டும் அரசுக்கு தந்த தொகை ரூ.2611 கோடி கள். 1956-இல் வெறும் 5 கோடியில் துவங்கப் பட்ட எல்ஐசி நிறுவனம் அதற்கு பிறகு அரசின் முதலீடு இல்லாமல் இமாலய வளர்ச்சியை பெற்றது. அதுமட்டுமல்லாது 11வது ஐந் தாண்டு திட்டத்திற்கு எல்ஐசி-இன் பங்களிப்பு 14,23,055 கோடிகள் சராசரியாக ஆண்டுக்கு 2,84,000 கோடிகள். ரயில்வே, நெடுஞ் சாலை துறை, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்பாசனம்,குடிநீர் என அரசின் திட்டங்களுக்கு சமூக நலனுக்கு முதலீடு செய்துள்ள தொகை ரூ.28,84,331 கோடி கள், 40 கோடிகள் பாலிசிகளை கொண்ட உலகின் முதல் நிறுவனம் எல்ஐசி என்று சொல்வதில் பெருமை கொள்வோம். தனியார் இன்சூரன்ஸ் என்ன செய்யும்? இலாப வேட்டையை தவிர என்ன தெரியும்? 

இதேபோலத்தான் வங்கி, எண்ணெய் நிறுவனங்கள், மின்சாரம், போக்குவரத்து, பெல் அனைத்தும் அரசுத்துறை நிறுவனங்க ளுக்கு லாபம் மட்டும் நோக்கமல்ல. சமூக சேவையும், சமூகத்தின் தேவையும் உள்ள டக்கியதாக உள்ளது. மக்கள் பணத்தை மக்கள் செல்வத்தை முதலாளிகள் வங்கி கடன் என்ற பெயரால் விஜய் மல்லையா, நீரவ் மோடி முதல் 54 முதலாளிகள் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டதாக மத்திய அரசே அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஓடிப்போன முதலா ளிகளிடமிருந்து பணத்தை வசூல் செய்வ தற்கு பதிலாக வராக்கடன் பட்டியலில் சேர்த்து ஏழை மக்கள் தலையில் மிளகாய் அரைக்க  முயல்கிறது மத்திய அரசு.

மத்திய, மாநில பொதுத்துறை ஊழியர்க ளும், அரசுத்துறை ஊழியர்களும், பொதுத் துறைகளை காக்கும் போராட்டம், தேசம் காக்கும் போராட்டமாக கருதி ஒன்றுபட வேண்டிய நேரமிது.

கட்டுரையாளர்: மாநிலத் தலைவர், 
தமிழ்நாடு மத்திய மின் ஊழியர் மத்திய அமைப்பு