புதுதில்லி:
பாஜக-வுக்கு ‘டாடா’ நிறுவனம் அதிகபட்ச நன்கொடையை வழங்கியிருப்பது, நாட்டு மக்களுக்கு நிச்சயமாக சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.கடந்த 2018-19 ஆண்டில், பாஜக-வுக்குமொத்தம் 743 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடை வந்துள்ளது. இது, எதிர்க்கட்சிகள் பெற்ற நன்கொடையை விட மூன்றுமடங்கு அதிகமான தொகையாகும். அதுமட்டுமல்ல, ‘டாடா’ குழுமத்தால் நிர்வகிக்கப்படும் ‘பிராக்ரசிவ் எலக்ட்டோரல் டிரஸ்ட்’டிடம் இருந்து மட்டும் ரூ. 357 கோடிரூபாயை பாஜக பெற்றுள்ளது. இது பாஜகவின் ஒட்டுமொத்த நன்கொடையில் சரிபாதித் தொகை என்பதுடன், கடந்த 16 ஆண்டுகளில் பெறப்பட்ட மிக அதிகபட்ச நன்கொடையாகும்.இந்நிலையில், பாஜகவுக்கு கிடைத்த இந்த அதிகபட்ச நன்கொடையை, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமியே கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத் தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “டாடா நிறுவனம் ஒரு மாபெரும் தொகையை, பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது; இதன்மூலம், ‘ஏர் இந்தியா’ நிறுவனப் பங்குகளை பெறுவதற்கே, இந்த நன்கொடையை டாடாநிறுவனம் அளித்துள்ளது என்று சர்ச்சைகள் ஏற்படக்கூடும்” என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.