tamilnadu

img

தினக்கூலிகள் அதிகரிக்கும் தமிழகம்

துடைத்தெறிவோம் வேலையின்மை எனும் அவமானம்

 

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு - தொழில் வளர்ச்சி கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பொருளாதார பேராசிரியர்கள், வாலிபர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பேசினர். அவர்களது உரையின் சாராம்சங்கள் வருமாறு:

  • முறைசாரா தொழிலாளர்கள் 46 கோடி பேர் வேலையிழப்பு

 

தமிழக திட்டக்குழு முன்னாள் தலைவர் பேராசிரியர் நாகநாதன்

1990ல் -இருந்து இந்தியப் பொருளாதாரம் மூன்று முறை சரிந்து எழுந்துள்ளது. இந்தமுறை ஏற்பட்டுள்ள சரிவு  மிகப் பெரும் சரிவாகக் கருதப்படுகின்றது.  இதற்குக் காரணம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  தேசிய மாதிரி சர்வே புள்ளிவிவரம்  2017ல் வெளிவந்தது. அதை மத்திய அரசு மறைக்க முற்பட்டது, ஆனால் வெளிவந்துவிட்டது. அதில், கடந்த 48 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பு பெருமளவிற்குச் சரிந்துவிட்டது; 

பொருளாதாரத்தில் முதன்மையானது வேளாண் துறை, இரண்டாவது தொழில் துறை,  மூன்றாவது சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளில் உற்பத்தியாகின்ற வருமானத்தைத்தான் தேசிய வருமானம் என்கிறோம். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியைத்தான் ஜிடிபி என்பார்கள். அந்த ஜிடிபி தான் தற்போது சரிந்துவிட்டது. அரவிந்த சுப்பிரமணியம் என்பவர் மோடியின் பொருளாதார ஆலோசகராக இருந்தார். அவர் ஓராண்டுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார் ஜிடிபியின் சரிவு 3.5 சதவீதம் என்று. இந்தியாவில் 80 சதம் முறைசாரா தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 46 கோடிப் பேர் வேலை இழந்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நகர்ப்புற பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  10.8 விழுக்காடு பெண்கள், 7.1 விழுக்காடு ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஊரகத்துறையில் ஆண்கள் 5.8, பெண்கள் 3.8 விழுக்காடு வேலை இழந்துள்ளனர்.

வேளாண்துறை, தொழில்துறை, பெருந்தொழில் துறை அனைத்தும் சரிவைக் கண்டுள்ளன. சிறு - குறு தொழில் மட்டும் 80 விழுக்காடு வேலைவாய்ப்பு தருகிறது. இதில் மட்டுமே பெரிய இழப்பை இளைஞர்கள் கண்டுள்ளனர். பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால் வாங்கும் சக்தியை மக்கள் இழந்துள்ளனர். இந்தியாவில் 15 விழுக்காடு மக்களிடம் மட்டுமே வாங்கும் சக்தி உள்ளது. 80 சதம், குறைந்த ஊதியம் வாங்குபவர்கள்  வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். இதற்குக் காரணம்  மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்று சொல்லலாம். அடுத்தது ஜிஎஸ்டி. மனிதனின் இயக்கத்திற்கு முக்கியமான இதயத்தைத் தாக்குவதைப் போல் பொருளாதாரத்தின் இதயத்தை மோடி தாக்கியுள்ளார்.

இந்தியாவில் பொருளாதாரத்தில் மாற்றம் வேண்டுமானால் பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒரு மாற்றம் தேவை. காங்கிரசின் பொருளாதார திட்டத்திற்கும் பாஜக திட்டத்திற்கும் வேறுபாடுகள் கிடையாது. பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படலாம் என நேரு கூறினார். நேரு தனியார் துறைக்குப் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். ஆனால் தற்போது இது மாற்றப்பட்டுள்ளது. பொதுத்துறையை அழித்தார்கள்; இன்று வேலை வாய்ப்பு இல்லை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு இல்லை; ஏற்றத்தாழ்வு பெருகிவருகின்றது. வறுமை பெருகி வருகின்றது. இது என்ன பொருளாதாரம்?
 

  • விலைவாசி உயர்வு 50 விழுக்காடு; ஊதிய உயர்வோ 10 விழுக்காடு

பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜெயரஞ்சன்

தொழில்துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பதிவுபெற்ற நிறுவனங்கள் 16 விழுக்காடு தமிழகத்தில்தான் உள்ளன. ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு என்று வரும் போது 3ஆவது இடத்தில்தான் இருக்கிறோம். வேலைவாய்ப்புத் துறையை எடுத்துக் கொண்டால் அது சமமற்ற நிலையில்தான் உள்ளது. வேலைவாய்ப்பு வழங்குவதில் வேளாண் துறை பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் வருமானம் என்று எடுத்துக் கொண்டால் 8 விழுக்காடுதான். 

கடந்த 20 ஆண்டுகளில் வேளாண் துறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏறக்குறைய 25 ஆயிரம் தொழிலாளர்கள் விவசாயத்தில் இல்லை. இதனால் மற்ற துறைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. 1983 - 84ஆம் ஆண்டுகளில் 59 விழுக்காடு தொழிலாளர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். 2011 - 12இல் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 விழுக்காடாகச் சரிந்துள்ளது. ஆனால் உற்பத்தித் துறையிலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடவில்லை. கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் 3.5 விழுக்காடு. அது தற்போது 14 விழுக்காடாக உயர்ந்துள்ளது. காரணம் விவசாயத்திலிருந்து வந்தவர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபடுவதுதான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது சுய தொழில் செய்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் குறைவு. தினக்கூலிகள் தமிழகத்தில்தான் அதிகம். நிரந்தரப் பணி என்பது குறைந்துகொண்டே வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 1980களில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பில் கூலியின் மதிப்பு 30 விழுக்காடாக இருந்தது. ஆனால் அது இப்போது 11 விழுக்காடாகக் குறைந்துள்ளது

மணி வேஜ், ரியல் வேஜ் என இரண்டு உண்டு. மணி வேஜ் என்பது இன்றைக்கு அப்படியே வாங்கும் ஊதியம். ஆனால் ரியல் வேஜ் என்பது விலைவாசி உயர்வுக்கு ஏற்ற ஊதியம். உதாரணமாக, விலைவாசி உயர்வு 50 விழுக்காடு கூடியுள்ளது என்றால், தொழிலாளர்களின் ஊதியம் 10 விழுக்காடு மட்டுமே கூடினால் எப்படி பொருட்களை வாங்க முடியும்?

  • 50ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி

இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்பது முதலாளித்துவ சமூக அமைப்பினுடைய அடிப்படையான ஒரு நெருக்கடியாக மாறியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுக்காலத்தில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட மோசமான விளைவுகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது நவீன தாராளமய கொள்கைகள்தான். முதலாளித்துவத்தில் மனித முகம் இருக்காதா என அதை ஆதரிப்பவர்கள் பல பேர் கேட்கின்றனர். அனைத்தையுமே நீங்கள் நிராகரிக்க முடியுமா? நிராகரிக்க வேண்டுமா? உலகமயம் என்று சொன்னால் ஒட்டுமொத்தமாக அது தேவையற்றதா எனப் பலர் கேட்கிறார்கள். எது உலகமயமாகிறது என்பதுதான் அடிப்படையான கேள்வி. புவியை நடத்து அதைப் பொதுவெளியில் நடத்து என்று பாரதிதாசன் கூறினார். உலகத்தையே பொதுமைப்படுத்தினால் அது உலகமயம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும் ஒருவிதமான உலகமயம். ஆனால் இன்றைக்கு உலகமயம் என்பது சர்வதேச நிதி மூலதனம் உலகெங்கும் சுற்றி வந்து கொண்டிருப்பதுதான். தன்னுடைய லாபத்திற்காக ஒட்டுமொத்த உலகத்தையே வேட்டைக்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அது சாதாரண உழைப்பாளி மக்களுக்கான ஏற்பாடு அல்ல என்பதால்தான் உலகமயத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். 

தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக உழைப்பாளி மக்கள் ஒன்றுகூடி விடக் கூடாது என்பதற்காகத்தான் மோடி அரசு ‘தேசபக்தி’ எனக் கூறி பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெறியைத் தூண்டுகிறது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அறிவொளி இயக்கம் எப்படி வெகுஜன இயக்கமாக மாறியதோ, அதுபோல் வேலை கொடு என்பது வெகுஜன இயக்கமாக மாற வேண்டும். வேலைக்கான, வாழ்வுரிமைக்கான போராட்டமும், மக்கள் ஒற்றுமைக்கான போராட்டத்தையும் இணைத்தே நடத்த வேண்டும். நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக இளைஞர்களை, பொதுமக்களை அணிதிரட்ட வேண்டும்.

 

  • வேலையின்மைக்கு எதிரான  போராட்டத்தை  வலுப்படுத்துவோம்

வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸ்

வேலையின்மை, கல்வி வியாபாரம் ஆகியவற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் வாலிபர், மாணவர் அமைப்புகள் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தன. அப்போராட்டங்கள் இன்று மேலும் வலுப்பெற்று வருகின்றன. இன்று அரசின் புள்ளிவிவரங்களும் வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தகுதி குறைந்த வேலைகளும், ஒப்பந்த வேலைகளும் இளைஞர்களின் வாழ்வை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளன. வேலையின்மைக்கு எதிராக தில்லியில் நடைபெற்ற வாலிபர் சங்கத்தின் சிறப்பு மாநாடு 100 நாள் வேலைத் திட்டம், வேலைச் சந்தையில் பாகுபாடு போன்றவற்றை முக்கிய பிரச்சனைகளாகக் கண்டறிந்துள்ளது. வேலையின்மை அதிகரிக்கும் போது இளைஞர்களிடையே பிரிவினைவாத சக்திகள் வலுப்பெற்று நாட்டின் ஒற்றுமைக்குக் கூட உலை வைக்கும் சூழலை உருவாக்குகின்றன. இச்சூழலில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொதுத்துறை நிறுவன விற்பனை, கல்வி வணிகமயமாதல் போன்ற முக்கியப் பிரச்சனைகளை முன்வைத்து, இக்கொள்கைகளை அமல்படுத்தும் அரசிற்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது. இவ்வாறான போராட்டங்கள் மூலமாக மட்டுமே மத, சாதி வெறிகளை நாம் பின்னுக்குத் தள்ளி, மோடி-அமித்ஷா கூட்டணியின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்ல இயலும்.

 

 

  • நிரூபித்துக் காட்டிய கேரளா

சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன்

தொடர் போராட்டங்களில் வாலிபர் இயக்கம் 50ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. வளர்ச்சி உள்ள நேரத்தில் வேலை இழப்பும் அதிகரித்து வருகின்றது.  65 சதமான உற்பத்தியைத் தருகின்ற கார்ப்பரேட் முதலாளித்துவம் 31 விழுக்காட்டினருக்கு மட்டுமே வேலை தருகின்றது. தேசிய அளவில் வருமானம் அதிகம் இருக்கக் கூடிய இடத்தில் வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. இதுவே இந்த சமூகத்தில் உள்ள முரண்பாடு.  பட்டப் படிப்பு படித்தவர்கள் துப்புரவு தொழில் செய்யத் தங்களை தயார் செய்து கொள்கின்றனர். தொழில் வளர்ச்சி என்று பேசுகின்ற முதலாளித்துவ அறிவுஜீவிகள் ரோபோ  போன்ற தொழில் நுட்பத்தை -  செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தை ஏன் துப்புரவு பணியில் ஈடுபடுத்த முடியவில்லை?

எங்குக் கூடுதல் லாபம் கிடைக்குமோ, எங்குக் கூடுதல் தொழிலாளிக்குச் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்குமோ அங்குதான் ரோபோக்களைப் பயன்படுத்துகின்றனர். நமது சமூகத்தில் மிகவும் இழிவாகக் கருதப்படுகின்ற துப்புரவுத் தொழிலில் பாதாளச் சாக்கடையில் இறங்கி வேலை செய்கின்ற அந்த தொழில், குறைந்த கூலிக்கு ஆள் கிடைக்கின்ற தொழிலாக உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதற்கு உதாரணம் இது. மிகக் கொடிய வேலைக்கு - அவமானமான வேலைக்கு  - அதிக ஆள் கிடைக்கின்றார்கள் என்றால் அது நம் தேசத்தின் அவமானம். தொழில் வளர்ச்சிக் காலத்தில் கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மலம் அள்ளுகின்ற தொழிலுக்கு  ரோபோவை பயன்படுத்துகின்றது. அங்கு உள்ள அரசாங்கத்தின் கொள்கைக்கும், மத்திய, மாநில அரசின் கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி என்றால் எது? இந்த தொழில் வளர்ச்சியும் தொழில் நுட்ப வளர்ச்சியும் சாதாரண பாமர மக்களுக்குப் பயன்பட்டால் அது வளர்ச்சி. அதைக் கேரள இடது முன்னணி அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது.  இதுவே நாம் சொல்லக் கூடிய மாற்று.  

சங்கம் வைக்கும் ஜனநாயக  உரிமையை  இந்தியாவில் முதலாளிகள் தரவில்லை. 83 நாள் வேலை நிறுத்தம் நடைபெற்ற தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கவில்லை, முதலாளிக்கு வலிக்கவே இல்லை. ஏன் வலிக்கவில்லை  என்று ஆய்வு செய்தபோது ரோபோவை பயன்படுத்தி வேலை செய்துள்ளனர் என்பதை அறிந்தோம். முதலாளித்துவ சமூகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்  மிகப் பெரிய  பிரச்சனை. வேலையில்லா இளைஞர்களை முதலாளித்துவம் தனது உற்பத்திக்கான ‘இருப்பு வைக்கப்பட்ட உழைப்புப் படையாக’ பயன்படுத்தும் என மார்க்ஸ் கூறுகிறார். எந்த தொழில் நுட்பம் வந்தாலும் அது வேலை வாய்ப்பை பெருக்குமானால் அதை நாம் வரவேற்போம். இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பில் ரயில்வேக்கு அடுத்தபடியாக கணினிதுறைதான் உள்ளது. ரயில்வேயில் 20 லட்சம் பேர் பணி செய்தனர். தற்போது 12 லட்சமாகக் குறைந்துள்ளது.

எல்லோருக்கும் வேலை என்பது கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் வரவேற்பதல்ல. நோக்கியா ஆலை மூடப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றது. மீண்டும் தற்போது நோக்கியா ஆலை திறக்கப்பட உள்ளது. ஆலை மூடலின் போது வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் அங்கு வேலை வழங்கப் போவதில்லை. இதற்கெதிரான போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. அவ்வாறு போராடினால் கொள்கை மாற்றம் ஏற்படும், ஆட்சி மாற்றம் ஏற்படும். உழைப்பாளி மக்களுக்கான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால்தான் பணிப் பாதுகாப்பு இருக்கும். 

 

  • பிப்.18 கோட்டை நோக்கி பேரணி

வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா

உழைப்புச் சந்தை என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. எந்த மாதிரியான வேலையில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள்? 12 மணி நேரம், 14 மணி நேரம் என உழைப்பை உறிஞ்சும் வேலையாக உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலைமை. அனைத்து பணிகளிலும் கடுமையான நெருக்கடி. சமூகப் பாதுகாப்பான வேலை, கவுரவமான வேலை, பாகுபாடற்ற வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான வலுமிக்க போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. 

தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் வேலையின்மை பிரச்சனையையும், அதற்குக் காரணமான அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையும் அம்பலப்படுத்த வேண்டும். உருவாக்குகிற திட்டங்கள் கூட வேலைவாய்ப்போடு கூடிய திட்டங்களாக இல்லை. அரசுத் துறைகளில் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறு-குறுந் தொழில்களைப் பாதுகாத்தால் மேலும் பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இந்தியப் பொருளாதாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால் அவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் அரசு வாரி வழங்குகிறது. மேலும் நாட்டின் கண் போன்ற பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாரிடம் தாரைவார்க்கப் பார்க்கிறது. இதற்கெதிரான பிரம்மாண்டமான போராட்டத்தை கேரள மாநில வாலிபர் சங்கம் நடத்தியிருக்கிறது.  நாடு முழுவதும் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், வேலையின்மைக்கு எதிராகவும் போராடி வரும் ஒரே இளைஞர் அமைப்பு வாலிபர் சங்கம் மட்டும்தான். தமிழகத்தில் வேலையின்மைக்கெதிராகவும், தொழில் வளர்ச்சிக்கான பிரச்சாரத்தையும் 5 ஆயிரம் கிராமங்களில் இளைஞர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதன் முத்தாய்ப்பாக பிப்ரவரி 18 அன்று கோட்டை நோக்கி மாபெரும் பேரணியும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணியும் நடைபெறும்.