tamilnadu

வாரணாசி தொகுதியில் மகா கூட்டணிக்கு ஆதரவு! பீம் ஆர்மி தலைவர் அறிவிப்பு

புதுதில்லி, ஏப்.18- உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில், செல்வாக்கு மிக்க தலித் தலைவராக வளர்ந்து வருபவர், ராவண் என்ற சந்திரசேகர ஆசாத். அம்பேத்கர் பெயரில் ‘பீம் ஆர்மி’ என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், அண்மையில், அந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றியதுடன், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். ஆனால், ஆசாத்தின் இந்த முடிவு வாரணாசியில் தலித் சமூகத்தின் வாக்குகளை பிரிக்கும் எனவும், அது பாஜகவுக்கே சாதகமாக இருக்கும் என்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்தார். “ஆசாத், பாஜகவின் ஏஜெண்ட்” என்றும் குற்றம் சாட்டினார். இதனால் மன வருத்தமடைந்த ஆசாத், தான் போட்டியிடுவதால் மோடிக்குத்தான் ஆதாயம் என்று கருதினால்,போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில், வாரணாசியில் போட்டியிடும் முடிவிலிருந்து ஆசாத் தற்போது விலகியுள்ளார். “வாரணாசியில் நான் போட்டியிடப் போவதில்லை. எனது போட்டியால் பாஜக பலனடைவதையும், மோடி வெல்வதையும் நான் விரும்பவில்லை. எனது ஆதரவு அங்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் மெகா கூட்டணிக்கு இருக்கும்” என்றுஆசாத் அறிவித்துள்ளார்.