புதுதில்லி:
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான முடிவுகள் அனைத்தும் மத்திய அரசாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை எனக் கட்டுப்பாட்டு மண்டலங்களை வரையறுப்பதும், அங்கே எந்தவிதமான பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்குவது என்பது குறித்தும் மத்திய அரசே தீர்மானிக்கிறது.ஆனால், இந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலஅரசுகளுக்கே வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு,சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ளார்.
கொரோனாவை எதிர்த்து நாடு மூன்றாவது பொது முடக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், ‘ஊரடங்கு, பொது முடக்கத்தை நீட்டிக்கும் அல்லது விலக்கிக் கொள்ளும் அதிகாரத்தை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும்’ என்று பாகேல் குறிப்பிட்டுள்ளார்.மேலும், மாநிலங்களுக்குத் தேவையான நிதியுதவியை மத்தியஅரசு உடனடியாக வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திஇருக்கும் பாகேல், அவ்வாறு செய்யாவிட்டால், மாநில அரசுகள் அன்றாடம் இயங்குவதே கூட கஷ்டமாகி விடும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.