tamilnadu

img

தொடர்ந்து 5வது முறையாக வட்டி விகிதங்களை குறைத்தது ஸ்டேட் வங்கி

மும்பை, செப். 9 - நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து 5வது முறையாக வீட்டுக் கடன்கள் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி தனது ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 1.1 சதவீதம் குறைத்தது. ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் ‘ரெப்போ’ விகிதம் எனப்படும். ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து தற்போது எஸ்.பி.ஐ வங்கியும் தனது வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.

எம்.சி.ஆர்.எல்.ஆர் எனப்படும் (marginal cost-based lending rate) வட்டி விகிதம் 10 புள்ளிகள் வரை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வங்கிகளில் பொதுமக்கள் வைக்கும், வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் 25 புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 10ம் தேதி முதல் இந்த வட்டி விகித குறைப்பு அமலாவதாகவும், ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.15 சதவீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த கால வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 20 முதல் 25 புள்ளிகள் வரையும், நீண்ட கால வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 10  முதல் 20 புள்ளிகள் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், அதனை இந்த வழியில் சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. வட்டி விகிதக் குறைப்புக்கான பலன்கள் வாடிக்கையாளர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மற்ற வங்கிகளை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.