நேற்று முன்னிரவு (ஞாயிறு) தில்லியில் இருக்கும் ஊடக நண்பர், நடந்துகொண்டிருக்கும் அராஜகத்தை பதற்றத்தோடு சொன்னார். சிறிது நேரத்திலேயே வீடியோக்கள் வெளிவரத்துவங்கின.முன் நெற்றி பிளவுண்டு ரத்தம் வழிய அழைத்துச்செல்லப்படும் தோழர் அய்ஷே கோஷின் படம் தான் முதலில்.பார்த்த கணத்திலிருந்து செய்வதறியாது உழன்றுகொண்டிருந்தேன். கோபமும், கொந்தளிப்பும், கண்ணீரும் பெருகியபடி இருந்தது.நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசிக்கு முதல்நாள். மனிதவளத்துறை அமைச்சரை எம்.பி.க்கள் பார்க்க மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை நேரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவரைப்பார்த்துக் கொடுக்க எனது கையில் மூன்று மனுக்கள் இருந்தன. அதில் ஒன்று கலிபோர்னியாவில் உள்ள “அம்பேத்கர் கிங் ஸ்டடி சர்க்கிள்” சார்பாகதயாரித்து அனுப்பப்பட்ட மனு. சென்னை ஐஐடியில் பலியான மாணவி பாத்திமாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு, கையெழுத்து இயக்கம் நடத்தி அனுப்பிவைத்திருந்தனர். சில பக்கங்கள் தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால் பிரிண்ட் எடுக்கும் போதுதான் தெரிந்தது, 70 பக்கங்களுக்கு மேல் கையெழுத்து பெற்று அனுப்பியிருந்தனர்.
அந்த நேரத்தில் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் கே. கே. ராகேஷ் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் தோழர் அய்ஷே கோஷ்-சும் உள்ளே வந்தார்கள். ஜேஎன்யுவின் போராட்டக்களத்தில் துடிப்பும் ஆவேசமுமாய் பார்த்த முகம், அன்போடு வணக்கம் சொன்னது. அவரின் கையில் பல்கலைக்கழகப் பிரச்சனை குறித்த மனு இருந்தது. அமைச்சரிடம் நேரில் சந்தித்து கொடுப்பதற்காக வந்திருந்தார். தோழர் ராகேஷும் நானும் அவரும் போகலாம் என பேசிக்கொண்டிருக்கையில் அமைச்சரின் உதவியாளர் சொன்னார் “ மதியம் சமஸ்கிருத மசோதா வருவதால் அமைச்சர் 1.30 மணியோடு எம். பி.க்களை பார்ப்பதை நிறுத்திவிட்டு புறப்படப் போகிறார்” என்றார்.
எனக்கோ 70 பக்கங்கள் பிரிண்ட் எடுக்க வேண்டிய வேலையிருந்தது. கலிபோர்னியா தோழர்கள் இவ்வளவு அக்கறையோடு இத்தனை பேரிடம் கையொப்பம் பெற்று அனுப்பியுள்ளனர். அதனை அரைகுறையாக பிரிண்ட் எடுத்து கொடுப்பதில் உடன்பாடில்லை. ஆனால் இன்னொரு பக்கமோ நிற்கமுடியாமல் அலைமோதிக்கொண்டிருந்தார் தோழர் அய்ஷே கோஷ், அமைச்சர் போவதற்குள் மனுவை கொடுக்க வேண்டுமென்று!
வேறுவழியில்லை. அவர்கள் இருவரும் ஜேஎன்யு மனுவை கொடுக்க உள்ளே போனார்கள். நான் வேகமாக பிரிண்ட் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
துடிப்பும் தீர்க்கமும் கொண்ட அந்த முகம் முழுவதும் ரத்தம் வடிய தொலைக்காட்சியில் பார்த்தபடி இருந்தேன். தில்லியில் உள்ள ஊடக நண்பர்களையும், தோழர்களையும் விசாரித்தபடி முழு இரவும் கழிந்தது. எத்தனை கொடிய இரவு இது.
இன்று மாலை அதே முகம்.
அதே தீர்க்கத்துடனும் தெளிவுடனும் செய்தியாளர்களிடம் கூறியது: “ நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்கவில்லை”...
முகமூடி அணிந்து
இருளுக்குள் மறைந்த கோழைகளே!
உங்களால் ஒரே ஒரு அடியாவது முன்வர முடியுமா?
வெளிச்சத்தை நோக்கியோ!
உண்மையை நோக்கியோ!