tamilnadu

img

சங்கர் ஆணவப் படுகொலை: கவுசல்யா தந்தைக்கு நோட்டீஸ்!

புதுதில்லி:
கவுசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டதற்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இம்மனு தொடர்பாக கவுசல்யா தந்தை பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு, தனது மகள் கவுசல்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட உடுமலை சங்கரை கூலிப்படையை ஏவி படு கொலை செய்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்குத் திருப்பூர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. தூக்குத் தண்டனைக்கு எதிராக சின்னசாமி உட்படக் குற்றவாளிகள் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சின்னசாமியை விடுதலை செய்தும் மீதமுள்ள 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் சங்கரின் சகோதரர் விக்னேஷ்வரன், கவுசல்யா தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை திங்களன்று விசாரித்த நீதிபதி, எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, வழக்கு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது கவுசல்யா தந்தை உட்பட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.