பொன்னமராவதி, ஏப்.20-புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்களை இழிவாகப் பேசி வெளியான வாட்ஸ் அப் ஆடியோ பரவியதால் தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. இதைத்தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பதற்றத்தைதணிக்கும் விதமாக பொன்னமராவதி காவல் நிலையத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில்திருச்சி சரக ஐஜி வரதராஜூ, டிஐஜி லலிதா லெட்சுமி, எஸ்பி செல்வராஜ், ஆட்சியர் உமா மகேஸ்வரி, வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்நிலைய கல்வீச்சில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 10 இளைஞர்களை விடுவிப்பது, பொன்னமராவதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்முழுவதும் வன்முறை சம்பவங்கள்நடந்தால் அதற்கு வீர முத்தரையர்முன்னேற்ற சங்கம் பொறுப்பேற்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும்பொன்னமராவதியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதற்கிடையே ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி ஊர்களில்மிகப்பெரிய அளவில் கடையடைப்பு மறியல் போராட்டம் நடந்தது.தங்கள் சமுதாயப் பெண்களை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட நபர்களை ஞாயிற்றுக்கிழமைக்குள் கைது செய்யாவிட்டால், மீண்டும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறுகையில், தவறான இழிவான முறையில் வாட்ஸ் அப்வீடியோவை வெளியிட்ட விஷமிகள் மீது காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணைசெய்து வருகிறார்கள். பொன்னமராவதியில் சட்டம் - ஒழுங்கு அமைதியாக உள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக 1000 நபர்கள் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டதாக தெரிவித்தார்.