உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் வழக்கு
புதுதில்லி,ஜூன் 3- மருத்துவப்படிப்பில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) இடம் ஒதுக்காமல் 4 ஆண்டுகளாக புறக்கணிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் வழக்கு தொடுத்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இளநிலை மருத்துவப் படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவப் படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்பு உள்ளிட்ட வற்றில் மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாண வர்களுக்கு ஒதுக்க வேண்டும். இளநிலை மருத்துவ படிப்புக்காக 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புக்காக 50 சதவீத இடங்களும், மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகிறது. அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி,பிசி மற்றும் எம்பிசி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அதை நிகழ் கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும்.
குறிப்பாக தமிழகத்திலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீத இடத்தை ஓபிசி,பிசி,எம்பிசி பிரிவினருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும். ஏனெனில் மருத்து வப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங் களில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவுக்கு மட்டும் ஒதுக்கவேண்டும் என்ற விதி இருந்தும் அதை இதுவரை மத்திய அரசு அமல்படுத்த வில்லை. அதேவேளையில் தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான சேர்க்கையில் மாநில அரசின் ஒதுக்கீடு இடங்களில் ஓபிசி, பிசி,எம்பிசி உள்ளிட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு கடைப்பிடித்து வரு கிறது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே திமுக, சிபிஎம், சிபிஐ,பாமக உள்ளிட்ட கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.