புதுதில்லி,ஜன.26- நாட்டின் 71-வது குடியரசு தினம் ஜனவரி 26 ஞாயிறன்று நாடு முழுவதும் கோலாகல மாக கொண்டாடப்பட்டது. தில்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் குடியரசு தின சிறப்பு விருந்தினரான பிரேசில் ஜனாதிபதிஅதிபர் ஜெயிர் போல்சனரோ பங்கேற்றார். பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதன்பின்னர் நடைபெற்றத ராணுவம், விமானம் மற்றும் கடற்படை ஆகிய முப்படை யினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுகொண்டார். இந்த அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் டி - 90 பீஷ்மா, கே - 9 வஜிரா - டி வகை கவச வாகனங்கள் பங்கேற்றன. இலகு வகை ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து சாகசம் செய்தன. பின்னர் சீக்கிய படைகளின் அணி வகுப்பு, கடற்படையின் வாத்திய குழு அணி வகுப்பு நடைபெற்றது. கடற்படையை சேர்ந்த நீண்டதூர ரோந்து விமானம் மற்றும் கொல்கத்தா வகையை சேர்ந்த போர் கப்பல் மற்றும் கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றின் மாதிரிகள் அணிவகுப் பில் கலந்து கொண்டு காட்சிப்படுத்தப்பட்டன.