புதுதில்லி:
முன்னாள் பிரதமர்களுக்கு, 14 உதவியாளர்கள் வரை நியமிக்கப் படுவது வழக்கம். அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், 14 உதவியாளர்கள் நிய மிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, திடீரென மன்மோகன் சிங்குக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டிருந்த 14 உதவியாளர்களின் எண்ணிக்கை, ஐந்தாக குறைக்கப்பட்டு, சர்ச்சை யாகியுள்ளது.
உதவியாளர்களின் எண்ணிக்கை யைக் குறைக்கக் கூடாது என்று மன்மோகன் சிங் சார்பில் பிரதமர் மோடிக்கு, முன்பே கடிதம் அனுப்பப் பட்டு இருந்தும் மோடி இவ்வாறு செய்துவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன.முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் ஆட்சியின்போதுதான், ஒரு பிரதமர் ராஜினாமா செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு சார்பில் வழங்கப்படும் 14 என்ற உதவியாளர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டது. எனினும், ஐ.கே. குஜ்ரால், தேவகவுடா, வாஜ்பாய் ஆகியோருக்கு, 5 ஆண்டுகளுக்குப் பிறகும் 14 உதவியாளர்களே நியமிக்கப்பட்டு வந்தனர்.
வாஜ்பாய்க்குப் பின்னர், பிரதமரான மன்மோகன் சிங்கும், முன்னாள்பிரதமர் வாஜ்பாய்க்கு 14 உதவியாளர்களை நியமித்தார். இரண்டாவது ஆட்சிக் காலத்தின்போது, வாஜ்பாயே 2 பேரை குறைத்துக் கொண்டார். கடைசி வரை 12 பேர் வாஜ்பாய்க்கு உதவியாளர்களாக இருந்து வந்தனர். எனவே, வாஜ்பாய்க்கு பின்பற்றப்பட்ட முறையையே தனக்கும் பின்பற்றலாம் என்றும் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், மன்மோகனின் கோரிக்கை யை ஏற்க முடியாது என்று, மே 26-அம் தேதி அதிகாரப்பூர்வமாக பிரதமர் அலுவலகத்திலிருந்து மன்மோகன் சிங்கிற்கு பதிலளிக்கப்பட்டு உள்ளது.