ஜெய்ப்பூர்
உட்கட்சி பிரச்சனை மற்றும் முதல்வர் பதவி தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராஜஸ்தான் மாநில துணை முதலவரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் தனது 18 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் தனியாக பிரிந்து சென்றார்.
இதனால் காங்கிரஸ் கட்சி துணை முதல்வர் பதவி மற்றும் கட்சி பொறுப்பை பறித்தது. சச்சின் பைலட் செயலால் மத்திய பிரதேச மாநிலத்தை போலவே ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் அசோக் கெலாட் அரசைக் காப்பாற்ற ஆளுநருடன் கடுமையாக போராடினார். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களான ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி சச்சின் பைலட்டை சமாதானம் செய்ய முயற்சித்தனர். இந்த 2 வேலைகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிட்டியது. முதல்வர் அசோக் கெலாட் போராட்டத்திற்கு ஆளுநர் சட்டசபையை ஆகஸ்ட் 14-ஆம் தேதி சட்டசபையை கூட்ட உத்தரவிட்டார். இதே போல ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி சந்திப்பிற்கு பிறகு சச்சின் மனமாற்றம் அடைந்து நேற்று முதல்வர் அசோக் கெலாட்டை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தார். "ஆப்ரேசன் லோட்டஸ்" வேலையை செயல்படுத்தி ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயன்ற பாஜக அதிர்ச்சியில் உறைந்தது.
இந்நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புக்கு பிறகு ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று (வெள்ளி) கூடியது. தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது. சச்சின் பைலட்டிற்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏ-க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வாக்கெடுப்பு குரல் மூலம் கணக்கெடுக்கப்பட்டது.