புதுதில்லி, மே 2 -புல்வாமா தாக்குதலையொட்டி, பாலகோட்டில் நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலை, பாஜக தனது சாதனைகள் போல பிரச்சாரம் செய்துவருகிறது. இந்நிலையில், பாஜகவின் துவக்க கால தலைவர்களில் ஒருவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான சங்கர் சிங், புல்வாமா தாக்குதல் பாஜகவின் திட்டமிட்ட சதி என்றுகுற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சங்கர் சிங் வகேலா மேலும் கூறியிருப்பதாவது:தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயங்கரவாதத்தைப் பாஜக பயன்படுத்தி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நாடு முழுக்க நடைபெற்றுள்ளன. ஆனால் அதை எல்லாம் பாஜக அரசு மூடி மறைத்து வருகிறது. பாலகோட் தாக்குதலில் எந்தவொரு பயங்கரவாதியும் கொல்லப்படவில்லை. எந்தவொரு சர்வதேச விசாரணை அமைப்பும், பாலகோட்டில் 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை. பாலகோட் விமானப்படை தாக்குதல் என்பது ஒரு திட்டமிட்ட சதி. புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை தகவல் வந்த பிறகும்கூட, அரசு, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் இருப்பதாக மத்திய அரசுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தால், ஏன் முன்கூட்டியே அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? புல்வாமா தாக்குதல் போன்ற ஒரு சம்பவம் நடைபெறும் வரை ஏன் காத்திருந்தது?ஏனென்றால் அத்தனைக்கும் பின் பாஜக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவே தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புல்வாமா தாக்குதல் பாஜகவின் மிகப்பெரிய திட்டமிட்ட சதி வேலையாகும். புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு இருந்த கார் கூட, குஜராத்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதுதான்.தேர்தல் வெற்றிக்காக, குழுக்கள் நடுவே, மோதலை ஏற்படுத்துவது பாஜகவின் வழக்கமாக இருக்கிறது.பாஜகவின் குஜராத் மாடல் தவறானது. அந்த மாநிலம் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள் ளது. பாஜகவில் உள்ள நிர்வாகிகள் பலரும், தாங்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக கருதுகிறார்கள். இவ்வாறு வகேலா கூறியுள்ளார்.