மும்பை:
வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான சந்தேகம் களையப்படாவிட்டால் சட்டம் - ஒழுங்கை மக்கள் கையில் எடுக்கும் ஆபத்து அரங்கேறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில மக்களவைத் தேர்தலில், ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தன. தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுக்கு மொத்தமே 5 இடங்கள்தான் கிடைத்தன. இந்த தோல்வி குறித்து, கடந்த 10 நாட்களாக பெரிதாக கருத்து எதையும் கூறாமல் இருந்து வந்த சரத் பவார், தற்போது, வாக்கு இயந்திரம் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 20-ஆவது ஆண்டு விழாவில் வெளிப்படையாக இதுதொடர்பாக அவர் பேசியுள்ளார்.
“வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மக்கள் மனதில் சந்தேகம் இருக்கக்கூடாது. தாங்கள் செலுத்திய வாக்கு மற்றவருக்கு சென்றுவிட்டது என மக்கள் நினைக்க இடம் தரக்கூடாது. இப்போது மக்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால், வாக்கு இயந்திரம் (Electronic voting mechine) மீதான சந்தேகம் வலுவடைந்தால், அவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று சரத் பவார் கூறியுள்ளார்.