புதுதில்லி:
நாடாளுமன்ற நடைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் மீறிநிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்றுபுதன்கிழமையன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
வேளாண் சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்தும் எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைகளைப் புறக்கணித்தனர்.இதுதொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் குறைவான விலைக்கு விவசாயப் பொருள்களைத் தனியார் வாங்க முடியாத வகையில் உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் அளித்திட்ட பரிந்துரையின்படி விவசாய விளைபொருள்கள் உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கு விவசாயஉற்பத்திப் பொருள்களை விவசாயிகளிடமிருந்து இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்திடுவதை உத்தரவாதப் படுத்திட வேண்டும் என்று தெரிவித்தார். (ந.நி.)