புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்கத் தால் முறைசாரா தொழிலாளர்கள் எனப்படும் அன்றாடம் வேலைக்குச்சென்று, அதில் கிடைத்த கூலிமூலம் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் துவங்கி, மாதந்தோறும் குறிப்பிடத்தக்க தொகையை வருமானமாக ஈட்டிவந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் வரை வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், பொதுமுடக்க கால வேலையிழப்பு மற்றும் வருவாய் இழப்பு காரணமாக, ஏப்ரல், மே மாதங்களில் ஏடிஎம்-மில் இருந்துஎடுக்கப்படும் பணத்தின் தொகை பாதியாக குறைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ரூ. 2 லட்சத்து 86 ஆயிரத்து463 கோடி ரூபாய் பணம் எடுக்கப் பட்டு உள்ளது. ஆனால், மார்ச் மாதம், இந்த தொகை 2 லட்சத்து 51 ஆயிரத்து 75 கோடி ரூபாயாக குறைந்து, ஏப்ரல் மாதத்தில், 1 லட்சத்து 27 ஆயிரத்து 660 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஏடிஎம்-மில் எடுக்கப்படும் தொகை 46 சதவிகிதம் குறைந்துள்ளது.