புதுதில்லி, ஆக. 1 - முத்தலாக் தடை மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். பாஜக 1 - ஆட்சியில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டாலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அதனை சட்டமாக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவருவதில் மத்திய பாஜக அரசு பிடிவாதமாக இருந்தது. பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முத்தலாக் தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இம்மசோதா மக்களவையில் கடந்த 27ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். 99 உறுப்பினர்கள் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. இந்த சூழலில் முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதனன்று ஒப்புதல் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “ஒரு முஸ்லிம் கணவன் தனது மனைவிக்கு வாட்ஸப், பேஸ்புக், செல்போன் என மின்னணு சாதனங்கள் வழியாக எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழி யாகவோ தலாக் கூறினால் அது செல்லாது. அது சட்டவிரோதமானதும் கூட. தலாக் சொல்லி விவகாரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம்.மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம். மேலும் கைது செய்யப்படும் நபருக்கு அவரது மனைவியின் கருத்துக்களை கேட்டபிறகு ஜாமீன் வழங்குவது தொடர்பாக முடி வெடுக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.