tamilnadu

img

தில்லி இமாமை நிராகரித்த முஸ்லீம்கள்! மோடியுடன் முரண்பட்ட ராமகிருஷ்ணா மடம்! - அ.அன்வர் உசேன்

“இப்படியும் நடக்குமா?” என - சில நாட்களுக்கு முன்பு கூட சாத்தியமற்றவை என மதிப்பீடு செய்யப்பட்ட  நிகழ்வுகள் மக்கள் பெருமளவில் எழுச்சியுடன் பங்கேற்கும் போராட்ட எழுச்சியில் கண்முன்னே  அரங்கேறும். தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இதனை கண்ணுற்றோம். இப்பொழுது குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களி லும் இதனை காண்கிறோம். 

சிஏஏ - என்பிஆர் - என்ஆர்சிக்கு எதிரான போராட்டத்தில் பல அற்புதமான அம்சங்கள் முன்னுக்கு வந்தன.  அவற்றில் சில முக்கியமானவை:

  •     இனி அபூர்வமாகிவிடுமோ என மதிப்பிடப்பட்ட இந்து-முஸ்லீம் ஒற்றுமை வலுவாக முன்வந்தது.
  •     இஸ்லாமிய மக்கள் முதன் முறையாக தில்லி இமாம் மற்றும் பல மத தலைவர்களின் மோடி ஆதரவு நிலையை  மக்கள் நிராகரித்தனர்.
  •     புகழ்பெற்ற ராமகிருஷ்ணா மடம் மோடியின் நிலை பாட்டை மறுத்தது.
  •     அரசியலில் இன்றைய தலைமுறைக்கு ஆர்வமில்லை என வலுவாக கூறப்படும் கருத்தை  மாணவர்களின் போர்க்கோலம் தவிடு பொடியாக்கியுள்ளது.
  •     இஸ்லாமிய பெண்கள் உட்பட பல்வேறு பிரிவை சேர்ந்த  பெண்கள் களத்தில் போராளிகளாக முன் நின்றனர்.

இந்து - முஸ்லீம் ஒற்றுமை  இந்திய மண்ணின் குணம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெரிய அளவிற்கு போராட்டங்கள் வெடிக்காது என்பதே மோடி அரசாங்கத்தின் மதிப்பீடாக இருந்தது. இந்த மதிப்பீடுக்கு முக்கிய  காரணம் காஷ்மீர் 370வது பிரிவு முடக்கம் மற்றும் அயோத்தி  தீர்ப்புக்கு பின்பு எந்த குறிப்பிடத்தக்க அசைவும் இல்லை. ஒரு புறத்தில் முஸ்லீம்களின் கோபம் வெளிப்படவில்லை; மறுபுறத்தில் இந்துக்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் நிலையை ஏற்றுக் கொண்டனர். இதே நிலைதான் குடியுரிமை சட்டத் திருத்தத்திலும் தொடரும் என்பது மோடி அரசாங்கத்தின் கணக்கு. ஒரு வேளை முஸ்லீம்கள் போராடினாலும் அதனை வைத்து இந்துக்களிடம் தமது நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என மோடி அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால் நடந்தது வேறு!  போராட்டக் களத்தில் முஸ்லீம்களும் இந்துக்களும் இணைந்து நின்றது மட்டுமல்ல; பிரமிக்கத்தக்க ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

தில்லி இமாமை நிராகரித்த இஸ்லாமியர்கள்!

தில்லி ஜாமியா மசூதி ஷாஜஹான் மன்னரால் கட்டப் பட்டது. இந்த மசூதியின் இமாமின் சொல் தில்லி இஸ்லாமிய மக்களுக்கு வேத வாக்கு போன்றது எனில் மிகை அல்ல. ஆனால் வரலாற்றில் முதன் முதலாக தில்லி  இமாமின் வழிகாட்டலை இஸ்லாமிய மக்கள் நிராகரித்தனர்.

தில்லி இமாம் அகமது புகாரி கூறினார்: “குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல. யாரும் முஸ்லீம்களின் அடையாளத்தை நிரூபிக்குமாறு கேட்க போவது இல்லை.”  அவர் மேலும் கூறினார்:  “முதலில் குடியுரிமை சட்ட திருத்தத்தை  புரிந்துகொள்ளு ங்கள். அது இந்திய முஸ்லீம்களை  பற்றியது அல்ல” இமாம் இப்படிக் கூறிய இரண்டு நாட்களுக்கு பின்னால் பழைய தில்லியில் பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்கள் பேரணி நடத்தினர். ஏனெனில் அவர்களுக்கு தெரியும்; குடியுரிமை சட்டம் தனியாக வரப்போவது இல்லை; அது என்.பி. ஆர். மற்றும் என்.ஆர்.சியுடன் சேர்ந்தே தாக்கு தலை தொடுக்கும் என்பதும் தில்லி இமாம் இதனை புரிந்து கொள்ளவில்லை அல்லது பொய் சொல்கிறார் என்பதும் மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். தில்லி இமாம் முதல் தடவையாக தனிமைப்பட்டார். இதேபோல ராஜஸ்தானின் புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவின் திவான் சையத் ஜெய்னுல் ஹுசேன் சிஸ்டி “குடியுரிமை சட்டத்தை தேசிய குடி மக்கள் பதிவேடுடன் இணைக்க வேண்டாம்; எந்த ஒரு முஸ்லீமின் குடியுரி மையும் பாதிக்கப்படாது” என வெள்ளிக்கிழமை தொழுகை யின் பொழுது உரத்த குரலில் முழங்கினார். ஆனால் அடுத்த நாள் முதல்வர் அசோக் கெலாட்டின் தலைமையில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இந்துக்களுடன் முஸ்லீம்களும் கை கோர்த்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதேபோல ஷியா பிரிவு மக்களின் தலைவர் கல்பே ஜவாத் என்பவரும் ஜமைத்துல் உலமா ஹிந்த் தலைவர் மகமூத் மதானியும் குடியுரிமை சட்டத்தை எதிர்க்க வேண்டாம் என முஸ்லீம் மக்களிடம் கூறினர். ஆனால் மக்கள் அவர்களது கருத்தை செவி மடுக்கவில்லை. மக்களின் கோபவேசத்தை கண்ட இவர்கள் பின்னர் தமது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தமது நியாயமான நிலைபாட்டுக்கு இந்து மக்களும் ஆதரவு தரும் பொழுது இஸ்லாமிய மக்கள் தவறாக வழிகாட்டினால் தமது மத தலைவர்களையும் கூட தள்ளி வைக்க தயங்கமாட்டார்கள் என்பதை இந்த போராட்டம் எடுத்துக் காட்டியது.

மோடியுடன் முரண்பட்ட ராமகிருஷ்ணா மடம்

சில தினங்களுக்கு முன்பு விவேகானந்தர் பிறந்த நூற்றாண்டு நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணா மடத்தின் தலைமையகத்திற்கு சென்ற பிரதமர் மோடி குடியுரிமை சட்டம் குறித்து பேசினார். இந்த பேச்சு தங்களை மிகவும் புண்படுத்திவிட்டதாக மடத்தின் நிர்வாகிகள் கூறினர். “எங்களது மடம் அரசியல் சார்பற்றது. அரசியல் சார்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் தேர்தல்களில் வாக்களிப்பது இல்லை. எங்கள் துறவிகளில் இந்துக்கள் மட்டுமல்ல; கிறித்துவர்களும் முஸ்லீம்களும் உண்டு” என குறிப்பிடும் மடத்தின் உயர் நிர்வாகிகள் மோடியின் உரை தங்களுக்கு ஏற்புடையது அல்ல என அழுத்தமாக மறுத்தனர். அனைத்து இந்து ஆன்மீக அமைப்புகளும் தம்மை ஆதரிக்கும் என இறுமாப்பு காட்டும் மோடிக்கு இது பெரிய மூக்கறுப்பு.

போராட்டத்தில் இளைய தலைமுறையும் பெண்களும்

சமீப காலமாக இளைய தலை முறையினர் அரசியல் சமூக பிரச்சனைகளில் அக்கறை காட்டுவது இல்லை எனும் கருத்தாக்கம் வலுவாக இருந்தது. ஆனால்  இந்த போராட்டத்தையே மாணவர்கள்தான் தொடங்கி வைத்தனர். ஜாமியாவில் ஆரம்பித்த இந்த போராட்டம் அலிகார், ஜாதவ்பூர், பனாரஸ், ஜவகர்லால் நேரு பல்கலைக்  கழகம் மற்றும் கேரளா கல்லூரிகள், சென்னை பல்கலைக் கழகம், ஐ.ஐ.டிக்கள், ஐ.ஐ.எம் என எங்கும் பரவியது. இதுவரை போராட்டத்தில் பங்கேற்காத கோவை சார்ந்த சில தனியார் கல்லூரிகள் கூட போராட்டத்தில் குதித்தன. இந்த போராட்டத்தில் பெண்களின் பங்கு மகத்தானது. அனைத்து பிரிவு பெண்களும் பங்கேற்றனர். இதில் குறிப்பிட வேண்டியது முஸ்லீம் பெண்களின் பங்கு ஆகும்.  பொதுவாக பொது வெளியில் பெரிய அளவு பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் முஸ்லீம் பெண்கள். ஆனால் இந்த பிரச்சனையில் களத்திற்கு வந்தனர். தில்லி ஷாஹின் பாக் எனுமிடத்தில் கடந்த முப்பது நாட்களாக கொட்டும் பனியிலும் பெண்கள் 24 மணி நேரமும் போராட்டத்தை தொடர்கின்றனர். அதேபோல 20 பேர் கொன்று குவிக்கப்பட்ட உ.பி. பிரயாகஞ்ச் நகரிலும் கொல்கத்தா பார்க் நகர் பகுதியிலும் தினமும் 30 பேர் வீதம் மாறி மாறி முஸ்லீம் பெண்கள் போராடுகின்றனர். இந்தியா முழுதும் நடந்த பேரணிகளில் முஸ்லீம் பெண்கள் பங்கேற்பு இது வரை இல்லாத ஒன்று.

ஜாமியாவில் தமது சக மாணவரை தாக்கிய காவலர் களை விரல் நீட்டி எச்சரித்த லதீதா ஃபர்சனா, ஆயிஷா ரென்னா எதிர்ப்பின் பிம்பமாக உருவாயினர். சங் பரிவார குண்டர்களால் தாக்கப்பட்டு மண்டை உடைந்த அடுத்த நாளே தலையில் பல தையல்களுடன் போராட்டக் களத்திற்கு வந்தது மட்டுமல்ல; ஒரடி கூட பின்வாங்க மாட்டேன் என கர்ஜித்த ஜே.என்.யூ.வின் அய்ஷே கோஷ்  தைரியத்தின் வடிவமாக உருவானார். தம்மை அவதூறு செய்வார்கள் என தெரிந்தும் போராட்டத்தில் பங்கு கொண்ட பாலிவுட் கலைஞர் ஸ்வாரா பாஸ்கர், ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன், கோலத்தில் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி அரசாங்கத்தை கலங்கடித்த காயத்ரி மற்றும் அவரது நண்பர்கள் என பல பெண்கள் இந்த போராட்டத்தில் புதிய பரிமாணத்தை தோற்றுவித்தனர். பாசிசத்திற்கு எதிரான இந்த எதிர்ப்பு இயக்கம் பல வடிவங்களில் முன்னெடுக்கப்படுவது காலத்தின் கட்டாயம். அதை பொருத்தமான முறையில் இந்திய எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துச் செல்கின்றனர். சமீபத்தில் தில்லியில் கூடிய 20 கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று(வியாழன்) நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வலியுறுத்தியும் மாபெரும் இயக்கம் நடைபெறுகிறது. அடுத்தடுத்த இயக்கங்களில் இன்னும் இன்னும் லட்சோபலட்சம் மக்கள் களம் காண இருக்கிறார்கள். கைகோர்ப்போம் அவர்களோடு!