tamilnadu

img

முஷாரப்புக்கு மரண தண்டனை

அரசமைப்பு சட்டத்தை முடக்கிய பாக்.முன்னாள் ஜனாதிபதி 

இஸ்லாமாபாத்,டிச.17- பாகிஸ்தான் அரசமைப்புச்சட்டத்தை முடக்கிய தேசத்துரோக வழக்கில்  அந்நாட்டின்  முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக 1998ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த பர்வேஸ் முஷாரப், திடீரென ராணுவ புரட்சி மூலம், 1999ஆம் ஆண்டு அந்நாட்டின் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து, 2001ஆம் ஆண்டில் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்ட அவர்,  2008ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். 2007 ஆம் ஆண்டில் திடீரென அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தையும் முடக்கினார். இதன்மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக, கடந்த 2013ஆம் ஆண்டு, நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வழக்குத் தொடர்ந்தது. முஷாரப்புக்கு எதிரான இந்த வழக்கை, மூன்று நீதிபதிகள் அடங்கிய, இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் செவ்வாயன்று  இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவ சர்வாதிகாரியுமான பர்வேஸ் முஷாரப்புக்கு, தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. தற்போது முஷாரப், அந்நாட்டை விட்டு வெளியேறி, துபாயில் வசித்து வருகிறார்.