விண்டோஸ் டெஸ்க்டாப் கணினியானாலும், ஆண்ட்ராய்ட் மொபைல்களானாலும் பொதுவாக பயன்பாட்டில் இருப்பது குரோம் பிரௌசர். கூகுளின் தயாரிப்பு என்பதால் எளிதாக நம் பயன்பாட்டில் இடம்பெற்றுவிட்டது. கூகுளின் செயல்பாட்டிற்கு கடும் சவாலாக அன்று முதல் இன்றுவரை இருப்பது ஃபயர்பாக்ஸ் பிரௌசர்தான். இந்த இரண்டையும் தவிர்த்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரௌசர், ஓபேரா பிரௌசர், யுசி பிரௌசர், சபாரி பிரௌசர் என வேறு பலவும் பயன்பாட்டில் உள்ளன. குரோம், ஃபயர்பாக்ஸ் பிரௌசர்கள் தரும் வசதிகளுடன் கூடுதலாக சில வசதிகளை தங்கள் தனித்தன்மையாகக் கொண்டு போட்டி்யிடுகின்றன. அந்த வகையில் மற்ற பிரௌசர்கள் தரும் வசதிகள் என்ன, அது நமக்கு பயன்படுமா என்பதைப் பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் எட்ஜ்
குரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் உடன் இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் போட்டியிட முடியாமல் தோல்வியுற்றதால், குரோம் பயன்படுத்தும் குரோமியம் நுட்பத்தைக் கொண்டு எட்ஜ் பிரௌசர் வடிவமைக்கப்பட்டது. புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தின் மூலம் இது அதிகமாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. குரோம் தரும் வசதிகளைத் தருவதுடன் பயனாளரின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக மைக்ரோசாப்ட் சொல்கிறது. அதிகம் பயன்படுத்தும் இணையப் பக்கங்களை ஆப் போல மாற்றி வைத்துக் கொள்ளலாம், குரோம் போலவே வடிவத்திலும் செயல்பாட்டிலும் இருந்தாலும் பயனர் விரும்பும் வகையில் மாற்றியமைக்கும் சில வசதிகளால் தனித்துவம் பெறுகிறது. பதிவிறக்கம் செய்ய : https://www.microsoft.com/en-us/edge
ஒபேரா
நம்பகமான பிரௌசராக பல காலம் பயன்பாட்டில் இருந்து வருவது ஓபேரா பிரௌசர். போட்டியாளர்களிடமிருந்து தன்னை மாறுப்பட்டுக் காட்டிக் கொள்வதில் சிறப்பிடம் வகிக்கிறது. இதன் தனித்தன்மைகள் பல. அதில் குறிப்பிடத்தக்க புராக்ஸி எனப்படும் மறைமுக (VPN) இணைய உலாவலாகும். அடுத்தது தற்போது பிரபலமாக மாறிவரும் டார்க் மோட் எனப்படும் கருமை நிறப்பின்னணி கொண்ட வசதியை ஓராண்டிற்கு முன்பே தன்னுடைய பிரௌசரில் ஓபேரா அறிமுகப்படுத்திவிட்டது.இணையப் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட்(Screenshot) செய்யும் நுட்பம் ஃபயர்பாக்ஸில் வருவதற்கு முன்பே ஓபேராவில் ஸ்னாப்ஷாட்(Snapshot) என்ற பெயரில் இந்த வசதி வந்துவிட்டது. மேலும் வாட்ஸ்அப், மெஸஞ்சர் போன்றவற்றை கணினி பிரௌசர்களில் ஆப் போல இணைத்துக் கொண்டு மற்ற இணையப் பக்கங்களைப் பார்த்துக்கொண்டே சிறிய விண்டோவில் சாட்டிங்கும் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
ஓபேரா டச் என்ற செயலியை ஆண்ட்ராய்ட் ஃபோனில் நிறுவிக்கொண்டால் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கணினி ஓபேரா பிரௌசரின் இடதுபுற மெனுவில் உள்ள My flow என்பதைக் கிளிக் செய்துமொபைல் ஓபேரா டச் செயலியில் QR கோட் ஸ்கேன் செய்து இரண்டு பிரௌசர்களின் இணைய உலாவலையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்தலாம். தற்போது ஓபரே GX என்ற பெயரில் கணினி விளையாட்டுப் பிரியர்களுக்கான ஒரு புதிய பிரௌசரையும் அறிமுகம் செய்துள்ளது.
பதிவிறக்கம் செய்ய : https://www.opera.com/
லூனாஸ்கேப்
இந்த பிரௌசரில் மூன்று விதமான ரெண்டரிங் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இண்டெர்நெட் எக்ஸ்புளோரரில் பயன்படுத்தப்பட்ட டிரைடெண்ட் (Trident), ஃபயர்பாக்ஸ் பயன்படுத்திய ஜீக்கோ (Gecko) மற்றும் வெப்கிட் (WebKit) எனப்படும் இந்தத் தொழில்நுட்பங்களில் எதுவேண்டுமோ அதனை நாமே தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வசதி அட்ரஸ்பாரில் வழங்கப்பட்டுள்ளது. ஜீக்கோ பயன்படுத்தும் பக்கங்களில் ஃபயர்பாக்ஸ் ஆட்ஆன் தொகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். டிரைடெண்ட் பயன்படுத்தும்போது எக்ஸ்புளோரர் வழங்கும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இணைய வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு பிரௌசரிலும் பக்கம் எப்படித் தோற்றமளிக்கும் என்பதை தனித்தனி பிரௌசர்களை நிறுவிப் பார்க்காமல் இந்த ஒரே பிரௌசர் பயன்படுத்தி மூன்று டேப்களில் டைல்ட் விண்டோ முறையில் ஒரே சமயத்தில் மூன்று தொழில்நுட்பத்திலும் பக்கங்களைத் திறந்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பயனர் விருப்பத்திற்கேற்ப டூல்பார் அமைத்துக் கொள்ளுதல், மௌஸ் செயல்பாடுகளை நிர்வகித்தல், திரை வண்ணங்கள், தீம்கள் அமைத்தல் எனப் பல வசதிகள் இதில் உள்ளது.பதிவிறக்கம் செய்ய : http://www.lunascape.tv/
மேக்ஸ்தோன்
இந்த பிரௌசரும் பல தனித்தன்மைகளைக் கொண்டிருக்கிறது. இணையப் பக்கங்கள் வேகமாக திறக்க வெப்கிட்(Webkit) அல்லது டிரைடெண்ட் (Trident) என்ற இரண்டு தொழில்நுட்பங்களில் ஏதேனும் ஒன்றை பிரௌசர்கள் பயன்படுத்துகின்றன. மேக்ஸ்தோன் பிரௌசர் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் ஒரே பிரௌசரில் தருவது இதன் சிறப்பம்சமாகும். முன்னணி பிரௌசர்கள் தரும் ஸ்கிரீன்ஷாட், இன்காக்னிட்டோ எனப்படும் தனிப்பட்ட வலை உலாவல் (Private Browsing), பெயர் முகவரி மின்னஞ்சல் போன்றவற்றை ஒருமுறை பதிவு செய்திருந்தால் மறுமுறை தேவைப்படும் இடங்களில் தானாகவே நிரப்பிக் கொள்ளும் வசதி (Auto Fill Forms) மேஜிக் ஃபில் என்ற பெயரில் இதிலும் உள்ளது. திரை வெளிச்சத்தைக் குறைத்து கண்களுக்கு பாதுகாப்பளிக்கும் நைட்மோட் வசதி, ரீடர் மோட், பிரௌசரின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் வசதி எனப் பலவும் இதில் உள்ளன.
யுடியூப் மற்றும் ஃபேஸ்புக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய தனியாக எந்த மென்பொருளையும் பதிவிறக்கத் தேவையில்லை, இந்த பிரௌசரிலேயே அந்த வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்க வீடியோக்களை காட்டும் திரையில் பதிவிறக்கும் பட்டனும் காட்டப்படும். தேவையெனில் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஹேண்டி டூல்ஸ் என்ற வசதியில் கணினியில் நாம் பொதுவாக பயன்படுத்தும் மைகம்ப்யூட்டர், டெஸ்க்டாப், நோட்பேட், கால்குலேட்டர், பெயிண்ட் போன்ற ஷார்ட்கட்களை பிரௌசர் திறந்திருக்கும் நிலையிலேயே கிளிக் செய்து திறக்க முடியும். இதன் கிளவுட் வசதியைப் பயன்படுத்தி விண்டோஸ், மேக் கணினிகள், ஐபோன், ஆண்ட்ராய்ட் என அனைத்து இயங்குதளங்களிலும் பிரௌசிங்கைத் தொடர முடியும். இந்த பிரௌசருடன் மேலும் பல வசதிகள் உள்ளன. அதுகுறித்து தனியே வரும் வாரங்களில் பார்க்கலாம். பதிவிறக்கம் செய்ய : https://www.maxthon.com/
விவால்டி
மைக்ரோசாப்ட் எட்ஜ் போலவே இதுவும் குரோமியம் பிரௌசர் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதுதான். எனவே, குரோம் தரும் ஆட்ஆன் தொகுப்பு களை இந்த பிரௌசரிலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். இந்த பிரௌசர் முந்தைய ஓபேரா டெவலப்பர்களின் தயாரிப்பு என்பதால் அதன் சிறப்புகள் சிலவற்றையும் பார்க்க முடியும். சைட்பாரில் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்வெப், ஃபேஸ்புக் தளங்களை சைட்பாரில் பின் செய்து கொள்ளமுடியும். புக்மார்க்,நோட்ஸ் பேனல், டேப்களை குரூப் செய்தல் எனப் பல வசதிகள் உள்ளது. நாம் எந்தெந்த இணையதளங்களில் எவ்வளவு மணி நேரத்தை செலவழித்தோம்என்பதை ஹிஸ்டரி வசதி மூலம் கிராப் வடிவமைப்பில் பார்க்கலாம். பதிவிறக்கம் செய்ய : https://vivaldi.com/
பிரேவ் பிரௌசர்
உங்களுடைய தகவல்களைத் திருடும் விளம்பரங்கள் மற்றும் பின்தொடரும் வைரஸ் நிரல்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கிறோம் என்ற வாசகத்துடன் இந்த பிரௌசர் விளம்பரப்படுத்தப்படுகிறது. இணையப் பக்கங்களில் வெளியாகும் விளம்பரங்கள் மற்றும் நம்முடைய இணையப் பயன்பாட்டைக் கண்காணிக்கும் நிரல்களை தடை செய்து பிரைவஸியைப் பாதுகாக்கும் வகையில் பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற பிரௌசர்களைவிட 2 அல்லது 3 மடங்கு வேகத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஃபார்ம் ஆட்டோ ஃபில், பாஸ்வேர்ட் மேனேஜர், டக்டக்கோ சர்ச் என்ஜினை இயல்பான நிலையில் தேடல் தளமாகக் கொண்டிருக்கிறது. வேண்டுமென்றால் வேறு தளத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம். இந்த பிரௌசருடன் கூகுள் குரோம் எக்ஸ்டன்சன் மென்பொருள்களை இணைத்துக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய : https://brave.com