புதுதில்லி:
மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொள்வதற்கு முன்பாகவே, அவர் அடுத்த 6 மாதங்களில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள வெளிநாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றதையடுத்து, நரேந்திர மோடி மே 30-ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றனர்.
ஆனால், மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே, அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணத் திட்டம் தயாராகி விட்டது. இதன்படி மே 30-ஆம் தேதி பதவியேற்கும் மோடி, ஜூன் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கிர்கிஸ்தான் நாட்டுக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
அதன்பின்னர், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஜப்பான் செல்கிறார். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்கிறார். அதைத்தொடர்ந்து செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யாவுக்கும் மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்கும் செல்கிறார். நவம்பர் 4-ஆம் தேதி தாய்லாந்து நாட்டின் பாங்காங் செல்கிறார். 11-ஆம் தேதி பிரேசில் செல்கிறார்.
கடந்த ஆட்சியில் இல்லாத ஒரு விஷேசம் என்னவென்றால், பிரதமர் பயணிப்பதற்காகவே அனைத்து வசதிகளையும் கொண்ட - கொஞ்சம் அலுப்பு ஏற்படுத்தாக இரண்டு போயிங் ரக சொகுசு விமானங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. புதிய ஆட்சியில், இந்த புதிய விமானங்களில்தான் மோடி இனிமேல் வெளிநாடுகளுக்கு சென்றுவருவார் என்று கூறப்படுகிறது.
2014-19 வரையான ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி 55 வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதற்காக ரூ. 2 ஆயிரத்து 21 கோடி மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்பட்டது. கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மோடி, ஜூன் 13-இல் மீண்டும் பயணத்தைத் துவங்குகிறார்.