புதுதில்லி:
1991-ஆம் ஆண்டு, புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு கொடுக்கும் முயற்சியில் இந்திய ஆட்சியாளர்கள் இறங்கினர்.
இந்த 28 ஆண்டுகளில், வங்கி, காப்பீடு,தகவல் தொடர்பு துவங்கி பாதுகாப்புத் துறை வரை அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டன. எனினும் இந்திய ரயில்வே மட்டும், அதன் ஊழியர்களால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தது.இந்நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் மத்திய பாஜக அரசு, ரயில்வேயையும் தனியாருக்கு விட முடிவு செய்துள்ளது. ரயில்களை ஏலத்தில் எடுப்பதற்கு, தனியார் முதலாளிகள் 100 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுத்துள்ளது.
இது ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத- அதாவது வருவாய் அதிகம் இல்லாத பயணிகள் ரயில் சேவைகளையும், அதேபோல குறைந்த வருவாயைத் தரும் சுற்றுலாத் தலங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளையும் மட்டுமே தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதிலும் முதற்கட்டமாக, பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு பயணிகள் ரயிலையும், ஒரு சுற்றுலா ரயிலையும் தனியார் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அதன்பிறகே பிறரயில் சேவையை இயக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மோடி அரசு சமாளித்துள்ளது.இந்த ரயில்களை ஏலத்தில் எடுக்கும் தனியார்கள், அந்த ரயிலுக்கு தாங்கள் விரும்பும் பெயரை சூட்டிக் கொள்வார் களே தவிர, மற்றபடி ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் வாடகை அடிப்படையிலேயே தனியாருக்கு வழங்கப்படும். அந்த ரயில்வே பெட்டிகள் ஐ.ஆர்.சி.டி.சி. பொறுப்பிலேயே இருக்கும். டிக்கெட் விற்பனையும் ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவே நடைபெறும்; இவ்வாறு செய்வதால், ரயில்வேக்கு அதிகமான லாபம் கிடைக் கும் என்றும் தெரிவித்துள்ளது.
உண்மையில், கூட்டமில்லாத பயணிகள் ரயில்கள், சுற்றுலா ரயில்கள் மட்டுமன்றி, முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒற்றையும் தனியாருக்கு விட, மோடி அரசு திட்டமிட்டுள்ளது.இந்திய ரயில்வே துறையானது, உலகின் 4-ஆவது பெரிய ரயில்வே ஆகும். 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 69 ஆயிரத்து 182 கி.மீ. தொலைவுக்கு இருப்புப் பாதையை கொண்ட இந்திய ரயில்வே தினமும் நூற்றுக்கணக்கான ரயில்களை இயக்கிவருகிறது. பல கோடி பேர் தினமும் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். பெரும்பாலான சரக்கு போக்குவரத்தும் ரயில்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்திய ரயில்வே-க்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த 2 லட்சம் கோடி ரூபாயை பெருமுதலாளிகளுக்கு சூறைவிடும் வகையிலேயே தனியார் மய முடிவை மோடி அரசு தற்போது எடுத்துள்ளது.