tamilnadu

img

மோடி- அமித்ஷா கூட்டணியின் சரிவு துவங்குகிறது

மும்பை /சண்டிகர்:
2019 நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்த 5 மாதங்களுக்குள் மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல்களும் நாடெங்கும் 51 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைதேர்தல்கள் நடந்துமுடிந்து, முடிவுகள் வெளியாகியுள்ளன.இந்த தேர்தல்களிலும் மதவாத தேசியவெறி மற்றும் இந்துத்துவா கருத்துகள் தான் மோடி மற்றும் அமித்ஷா கூட்டணியால் முன்வைக்கப்பட்டன. வெற்றி நிச்சயம் என கூச்சலிட்டனர். பெரும்பாலான ஊடகங்களும் ஒத்து ஊதின. கருத்து கணிப்புகளும் மோடி-அமித்ஷா எனும் விஸ்வரூப அரசியல் சக்தி முன்பு ஏனையோர் தூசு என கூப்பாடு போட்டனர். ஆனால் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளன. எனினும் இந்த ‘வெற்றிகளும்’ பிரமாண்டமானவை என மோடியும் அமித்ஷாவும் கூறுகின்றனர். செல்வாக்கில் பெரும் சரிவு எனும் உண்மையை மறைத்து வெற்றி எனும் பொய்யை நிலைநாட்டி தமது ஆதரவாளர்கள் மற்றும் ஊழியர்களை நம்ப வைக்க முயல்கின்றனர். 

ஹரியானாவில் பா.ஜ.க.வின் சரிவு
ஹரியானாவில் மீண்டும் தமது ஆட்சிதான் என பா.ஜ.க.வினர் கனவுகண்டனர். ஆனால் பெரும்பான்மை பெற முடியவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் 79 சட்டமன்றங்களில் முன்னிலை வகித்த பா.ஜ.க. 58.2% வாக்குகளை பெற்றது.  இப்பொழுது பெரும்பான்மை பெறவில்லை என்பது மட்டுமல்ல; வாக்குகள் 36.2% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 22% வாக்குகள் சரிந்துள்ளன. இது சாதாரண வீழ்ச்சி அல்ல.பா.ஜ.க.வின் ஏழு அமைச்சர்கள் தோற்றுள்ளனர். தேர்தலுக்கு சற்று முன்பு பா.ஜ.க.வில் இணைந்த மல்யுத்த வீரர்யோகேஸ்வர் தத், மல்யுத்த வீராங்கனைபபிதா போகத், டிக்டாக் பிரபலம் சோனாலிபோகத் (இவரது டிக்டாக் செயலியை 1,66,000 பேர் பின் தொடர்கிறார்களாம்) ஆகியோர் படுதோல்வி அடைந்தனர்.சாதாரண மக்களின் குறிப்பாக விவசாயிகளின் நிலைமை பற்றி சிறிதும்கவலைப்படாத ஒரு ஆட்சியை பா.ஜ.க.வின் முதல்வர் கட்டார் நடத்தியுள்ளார். இவரது ஆட்சியில்தான் மாருதி உட்படபல நிறுவன தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் ஆட்சி அமைத்தே தீருவதுஎன பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டுள் ளது. இதற்காக பல எதிர்கட்சி உறுப்பி னர்களை விலைக்கு வாங்கும் என்பதில் ஐயமில்லை. அதுதான் பா.ஜ.க.வின் கடந்தகால நடைமுறை.

மகாராஷ்டிராவில் பின்னடைவு
2014 சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க./சிவசேனா/காங்கிரஸ்/தேசியவாத காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்டன. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க./சிவசேனா ஒருபுறமும் காங்கிரஸ்/தேசியவாத காங்கிரஸ் மறுபுறமும் கூட்டணி அமைத்தன. 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் 227 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்த பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 51சதவீத வாக்குகளை பெற்றது.எனவே இந்த தேர்தலில் 220 தொகுதிகள் தமது இலட்சியம் என இந்த கூட்டணி அறிவித்தது. அதன் உள்குத்தாக பா.ஜ.க.தனியாக பெரும்பான்மை பெற திட்டமிட்டது. அப்படி தனியாக பெரும்பான்மை அமைந்தால் சிவசேனாவின் தொல்லைகள் இருக்காது என்பது பா.ஜ.க.வின் எண்ணம். ஆனால் மக்கள் இவர்களதுகனவை தகர்த்துவிட்டனர்.  இந்த கூட்டணி 162 இடங்களைத்தான் பெற முடிந்தது. வாக்குகளும் 42சதவீதமாக குறைந்து விட்டன. மகாராஷ்டிராவிலும் பல அமைச்சர்கள் தோற்றுள்ளனர். சிவசேனா ஏற்கெனவே தனது குடைச்சலை தொடங்கிவிட்டது. உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவை முதல் அமைச்சராக ஆக்க வேண்டும் என கோட்டைக்குள் குத்து வெட்டு நடக்கிறது.

இதர மாநிலங்கள்
குஜராத்தில் 6ல் 3 தொகுதிகளிலும் பீகாரில் 5ல் 4 தொகுதிகளிலும் பஞ்சாபில் 4ல் 3 தொகுதிகளிலும் பா.ஜ.க. தோற்றது.தெலுங்கானாவில் வெறும் 1.3 % வாக்குகளையே பெற்றது. உ.பி.யில் 3 தொகுதிகளிலும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க.தலா ஒரு தொகுதியில் தோற்றது. சத்தாரா நாடாளுமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக மே மாதத்தில் வென்றவரை பா.ஜ.க. இழுத்து மீண்டும் அங்கு போட்டியிட வைத்தது. அவர் பரிதாபமாக தோற்றுப் போனார். ஒட்டு மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவு என்பதே உண்மை.

===அ.அன்வர் உசேன்===