புதுதில்லி:
வாகன விற்பனை மந்தமாக இருக்கும் நிலையில் வரியைக் குறைக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்திய வாகன உற்பத்தித் துறை கடந்த சில மாதங்களாகவே கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் வாகன உற்பத்திக்கான செலவுகள்அதிகரித்துள்ள நிலையில் மறுபுறம் வாடிக்கையாளர்களிடையே வாக னங்களுக்கான தேவை குறைந்து விற்பனை நலிவடைந்துள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால் நிறுவனங்கள் வேறு வழியின்றி வாகனங்களின் விலையையும் உயர்த்தியுள்ளன. இதுபோன்ற இக்கட்டான சூழலில் இந்திய ஆட்டோமொபைல் துறை இருக்கும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என்று அரசுத் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனப் பயன் பாட்டை அரசு ஊக்குவிப்பதால் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதுபோன்ற சூழலில் வாகனத்துறையின ரின் குறைகளைக் கேட்டறிய அரசு தரப்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் வாகனஉற்பத்தித் துறையினர் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார், டொயோடா மோட்டார்ஸ், ஸ்கோடா, மகிந்திரா & மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் செயலதிகாரிகள் கலந்துகொண்டனர். வாகனங்களுக்கான வரியைக் குறைக்கவேண்டும், ஆட்டோமொபைல் டீலர்க ளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எளிதில்கடனுதவிகள் கிடைக்க வேண்டும், பழையவாகனங்களை அழித்துவிட்டு புதிய வாகனங்களை மாற்றுவதற்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது.நிதி ஆயோக் தரப்பிலிருந்து எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால் பெட்ரோல், டீசல் வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துவிட்டதாக அவர்கள் முறையிட்டுள்ளனர்.