புதுதில்லி:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் மாநாட்டில் வெள்ளிக்கிழமை வரை அவர் கலந்து கொள்கிறார்.
முன்னதாக, பிஷ்கெக் நகருக்கு பாகிஸ்தான் வழியாக செல்லவே பிரதமர் மோடி முடிவு செய்திருந்தார். இதற்காக பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஏற்கெனவே சுஷ்மா ஸ்வராஜ் பிஷ்கெக் செல்வதற்கு, பாகிஸ்தான் அனுமதி அளித்திருந்ததால், மோடியின் பயணத்திற்கும் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. இரண்டு வழிகளை தங்களுக்கு திறந்து விட வேண்டும் என்று இந்தியா கூறியபோது, அதனையும் ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான், இந்திய அரசு விருப்பப்படும் வழிகளிலேயே பயணித்துக் கொள்ளலாம் என்றும் கூறியது.
ஆனால், வியாழனன்று கிர்கிஸ்தான் புறப்பட்ட மோடி, திடீரென பாகிஸ்தான் வழியாக செல்லாமல், ஓமன், ஈரான், மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிஷ்கெக் நகரைச் சென்றடைந்துள்ளார். இதுதொடர்பாக கேள்விகள் எழுந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவே பயணப் பாதையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.