tamilnadu

img

இரு நாட்டு வளர்ச்சிக்கு சீன-இந்திய ஒத்துழைப்பே சரியான தேர்வு

புதுதில்லி:
இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன்வெய்தொங் புதனன்று புதுதில்லியில் இந்திய இளைஞர் பிரதிநிதிகளுடன் இணையவழி பரிமாற்றம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சீனாவும் இந்தியாவும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கூட்டு வளர்ச்சி பெறுவது ஒன்றே ஒரே ஒரு சரியான தேர்வாகும் என்றும் இது இரு நாடு மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்குப் பொருந்தியது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், இவ்வாண்டு சீன - இந்திய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகும். இந்த காலக்கட்டத்தில் இரு நாடுகளும் தத்தமது நாட்டில் கொரோனா தொற்றைத் தடுத்துச் சமாளிக்கும் அதேவேளை இரு நாட்டுறவை வலுப்படுத்தும் முக்கிய கடமையையும் எதிர்நோக்கியுள்ளன. இப்பின்னணியில், இரு நாட்டுறவை வளர்க்கும் முக்கியத்துவத்தை இரு நாட்டு இளைஞர்களும் அறிந்து கொண்டு, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கியப் பொதுக் கருத்துகளை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்திய இளைஞர் தலைவர் சம்மேளனத்தின் தலைவர் ஹிமத்ரிஷ் சுவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 70க்கும் மேலான  இளைஞர் பிரதிநிதிகளும் இந்திய  - சீனச் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.