புதுதில்லி:
கடந்த 2016-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தேச விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறி, அன்றைய மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்ட 9 மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2019 ஜனவரியில் குற்றப்பத்திரிகையையும் போலீசார் தயார் செய்தனர்.இதனிடையே, தில்லி அரசிடம் முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே, இவ் வழக்கை தொடர்ந்து நடத்த முடியும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. குற்றவியல் நடைமுறைகளின் கீழ்,தேசத்துரோக வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யும் போது, விசாரணை முகவர் மாநில அரசின் ஒப்புதல் அல்லது அனுமதியை வாங்க வேண்டும் என்பது விதி. அதன்படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒரு நியாயமான காலக்கெடுவுடன் மூன்று மாதங்களுக்குள் ஒரு முடிவை எடுக்குமாறு, தில்லி அரசையும் 2019 ஏப்ரல்6 அன்று தில்லி நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.ஆனால், இவ்விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல், ஆம் ஆத்மி அரசுஓராண்டாக கோப்பை கிடப்பில் போட்டிருந்தது. இந்நிலையில்தான், தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், திடீரென கண்ணையா குமார் உள்ளிட்டோர் மீதான தேசத்துரோக வழக்கைத் தொடர்வதற்கு தில்லி காவல்துறையின் சிறப்புப்பிரிவுக்கு கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது அரசியல் கட்சித் தலைவர்கள்,சமூகசெயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
தேசத் துரோகச் சட்டம் குறித்த புரிதலில் மத்திய அரசுக்கு சற்றும் சளைக்காதஅரசாக, கெஜ்ரிவால் அரசு இருப்பதாக, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம்விமர்சித்துள்ளார்.பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், “நீங்கள் எவ்வளவுக்கு விலை போனீர்கள்” என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டியே, தான் குறிவைக்கப்பட்டு உள்ளதாக கண்ணையா குமாரும் குற்றம் சாட்டியுள்ளார். ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 3 பேருடன் கடந்தமாதம் தில்லியில் பிடிபட்ட ஜம்மு- காஷ்மீரின் மூத்த காவல்துறை அதிகாரி டேவிந்தர்சிங் மீது தேசத் துரோக வழக்கு பதியப் படாததையும் கண்ணையா குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவகையில் தில்லி அரசுக்கு நன்றி கூறுவதாகவும், விசாரணையின்போது, ஆளும் அரசாங்கத்தின் பொய்களையும், தேசியவாதி என்ற அவர்களின் தவறானகூற்றையும் நீதிமன்றத்தில் அம்பலப் படுத்துவோம் என்றும் கண்ணையா குமார் கூறியுள்ளார்.“இது வெறும் வழக்கமான நடைமுறை சார்ந்தது என்று நான் நினைக்கவில்லை... ஒரு தேசத்துரோக வழக்கு என்பது அரசாங்கத்தின் அனுமதியைக் குறிக்கிறது. தில்லி அரசாங்கத்தின் நிலையான ஆலோசகர் (ராகுல் மெஹ்ரா) அனுமதி வழங்கக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்; அது தற்போதுபுறக்கணிக்கப்பட்டுள்ளதை நினைவுபடுத்த வேண்டும்” என்று உமர் காலித் குறிப்பிட்டிருக்கிறார்.