மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்
புதுதில்லி, ஜூன் 3- 7500 ரூபாய் ரொக்கம், பத்து கிலோ உணவு தானியங்கள் விநியோகம், கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை, பொதுத்துறைகளைத் தனியாரிடம் தாரை வார்ப்பதை நிறுத்துக உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வரும் ஜூன் 16 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரித்திடுமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதன்கிழமை இணையவழியில் நடைபெற்றது. மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் புதனன்று மாலை 4மணியள வில் கூட்டமுடிவுகளை விளக்கி பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி செய்தி யாளர்களிடையே பேசினார். அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கேரளா மாடல்
கொரோனா வைரஸ்தொற்றைக் கட்டுப் படுத்திக் கொண்டிருப்பதில் கேரள இடது ஜன நாயக முன்னணி அரசாங்கமும் அதன் மக்களும் மிகச்சிறந்த முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதனை அரசியல் தலை மைக்குழு பாராட்டி வாழ்த்துகிறது. தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட கேரளம், இப்போது வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் நாட்டின் இதர பகுதிகளிலிருந்தும் மாநி லத்திற்குள் வந்துகொண்டிருப்பவர்கள் மூலமாக இத்தொற்று பரவாது தடுத்திட தேவையான முயற்சிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்கு, ‘கேரளா மாடல்’ என்று சர்வதேச அள வில் பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் மத்திய அரசாங்கம் இதிலிருந்து படிப்பினையைக் கற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.
மோடி அரசாங்கத்தின் தோல்வி
இதற்கு நேரெதிராக, மத்திய அரசாங்கம் இந்திய மக்கள் தொற்றை எதிர்கொள்வதை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற விதத்தில் தள்ளிவிட்டிருக்கிறது. திட்டமிடப்படாத, தான்தோன்றித்தனமாக, அபத்தமான முறையில் பிரதமர் மோடி சமூக ஊரடங்கை அறிவித்தார். சமூக ஊரடங்கு காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு எதிராக எவ்விதத் தயாரிப்புப் பணிகளையும் செய்ய முடியாது திடீரென்று அறி வித்து, கடந்த 63 நாட்களிலும் கூட (அவற்றைத் தளர்த்திக் கொள்வதற்கு முன்பு) சுகாதார வசதி களை மேம்படுத்துவதற்கோ அல்லது பாதி ப்புக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ எதுவும் செய்திடவில்லை. மாநில அரசாங்கங்களைக் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகத் திடீரென்று அறி வித்தபின், இப்போது மத்திய அரசு அதனால் ஏற்பட்ட சுமைகளை, குறிப்பாக, நாடு முழுதும் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழி லாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்ச னைகளை, மாநில அரசாங்கங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டிருக் கிறது. பிரதமர் மோடி, தன்னுடைய பெயரில் ஒரு தனியார் அறக்கட்டளை நிதியத்தின் மூலமாக வசூலித்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மறுத்து வருகிறார்.
இப்போது சமூக ஊரடங்கைத் தளர்த்தும் விஷயத்திலும், மத்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை திட்டமிடாத பாணியில், தன்னுடைய பொறுப்புகளைக் கைவிட்டுவிட்டு, மாநிலங்களே அதனைத் தீர்மானித்துக்கொள்ளட்டும் என்கிற முறையில் நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்து வதற்குப் பதிலாக, அதனால் ஏற்படும் உயிரி ழப்பைக் குறைப்பதற்குப் பதிலாக, சமூக ஊர டங்கு காலத்தில் அதன் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதையே காட்டி இருக்கிறது. 2020 மார்ச் 24 அன்று, இந்தியா 564 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு ‘பாசிடிவ்’ என்று வகைப்படுத்தப் பட்டிருந்தார்கள். 10 பேர் மரணம் அடைந்திருந் தார்கள். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து, மே 24 அன்று இவ்வாறு ’பாசிடிவ்’ என்று வகைப்படுத்தப்பட்டு பாதிப்புக்கு உள்ளான வர்கள், 74,560 பேர்களாகும், இறந்தவர்கள் 3,867 பேர்களாகும். ஜூன் 2 அன்று இந்த எண்ணிக்கை முறையே 2,07,615 மற்றும் 5,815 ஆக உயர்ந்திருக்கிறது.
சமூக ஊரடங்கு காலம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற ஒரே சிந்தனையுடன் செயல் படுவதற்குப் பதிலாக, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக, மத்திய அரசாங்கம் திட்டமிட்டமுறையில் தன்னுடைய மூர்க்கத்தனமான மதவெறி நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதிலேயும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றுவதிலேயுமே குறியாக இருந்தது. முஸ்லீம் மதத்தவரைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருப்பதை அரசியல் தலைமைக் குழு கண்டிக்கிறது. அவர்களைத் தன்னிச்சையாகக் கைது செய்வதையும், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொ கைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அமைதியானமுறையில் போராடியவர்களையும், தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறு வோரையும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகப் பிரிவு, சட்டவிரோத நடவடிக்கை கள் தடைச்சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் முதலான கொடூரமான சட்டப்பிரிவுகளின்கீழ் கைது செய்து சிறையில் அடைப்பதையும் கண்டிக் கிறது. மேலும் மத்திய அரசாங்கம் இந்த சமூக ஊரடங்கு காலத்தில், அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சமான கூட்டாட்சித் தத்துவத்தை மறுதலித்து, அதிகாரங்கள் அனைத்தையும் தம்வசம் குவித்துக்கொள்வதற்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
இந்தியா – சீனா எல்லைப்பிரச்சனை
இந்தியா – சீனா எல்லைப்பிரச்சனை தொடர் பாக லடாக் மற்றும் சிக்கிமில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இப்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்து கவலை கொள்கிறது. ராணுவம் மற்றும் ராஜீய மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே இயல்பான முறையில் உறவுகள் நீடிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கட்சி நம்பிக்கை கொள்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிவாரணப் பணிகள்
சமூக ஊரடங்கு காலத்தில் வேலை மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிவாரணம் அளித்திடவும், பட்டினி கிடப்போ ருக்கு உணவு அளித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் அதன் உறுப்பினர்களும் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொண்ட உறுதி யான முயற்சிகளை அரசியல் தலைமைக்குழு பாராட்டுகிறது. இந்நிவாரண நடவடிக்கைகளை, குறிப்பாக மிகவும் தேவைப்படக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, தொடர்ந்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது.
மத்தியக்குழுக் கூட்டம்
அடுத்த மத்தியக்குழுக் கூட்டம் ஜூலையில் இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்போது அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் நடந்ததைப்போன்று நடத்திட அரசியல் தலைமைக்குழு தீர்மானித்திருக்கிறது.
அகில இந்திய எதிர்ப்பு தினம்
இப்போதைய சூழ்நிலையில், குறைந்தபட்சம் 15 கோடி மக்கள் வேலையில்லாத பட்டாள த்தில் கூடுதலாக சேர்ந்திருக்கக்கூடிய நிலை யில், வேலையில்லாதோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது. மக்களில் பெரும் பகுதி யினர் தங்கள் வாழ்வாதாரங்களின் அனைத்து அம்சங்களையும் இழந்திருக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் இல்லங் களுக்குத் திரும்பிச் செல்லும் காட்சி நாட்டில் எந்த அளவிற்கு நிலைமைகள் மோசமாக இருக் கின்றன என்பதை காட்டுகிறது. இத்தகைய நிலைமைகளுக்கு எதிராக கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்சி தீர்மானித்திருக்கிறது. இந்தக் கிளர்ச்சிப் போராட்டங்கள் தனிநபர் இடைவெளியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் தலைமைக்குழு அகில இந்திய எதிர்ப்பு நாளை வரும் ஜூன் 16 அன்று அனுசரித்திட அறைகூவல் விடுக்கிறது.
கோரிக்கைகள்
வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கமாக அளித்திட வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக அளித்திட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச்சட்டத்தின் கீழ் 200 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டும், ஊதியத்தொகை யையும் உயர்த்திட வேண்டும். நகர்ப்புற ஏழை களுக்கும் இதனை விரிவாக்கிட வேண்டும். வேலையில்லாதோருக்கு வேலையில்லா கால நிவாரணம் உடனடியாக அறிவித்திட வேண்டும். நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதை நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதையும், தொழிலாளர் நலச்சட்டங்களைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றுவதையும் நிறுத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.