புதுதில்லி:
பிரதமர் மோடி தலைமையில், மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ.கஆட்சி அமைந்ததிலிருந்து நாட்டின் பல் வேறு பகுதிகளில் மதத்தின் பெயரால் நடைபெறும் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக, தலித்துக்களும், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினரும் தாக்குதலுக்கு உள்ளாவது அன்றாட நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், நாட்டின் தற்போதைய போக்கு மிகவும் கவலையளிக்கிறது என்றும், இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், பல்வேறுதுறைகளைச் சேர்ந்த நாட்டின் மிக முக்கிய ஆளுமைகள் 49 பேர் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா,நாட்டின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் சியாம் பெனகல், அபர்ணா சென்,மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அனுராதா கபூர்,திரைக்கலைஞர்கள் சவுமித்ரா சாட்டர்ஜி,ரேவதி, கொங்கனா சென் சர்மா, பாடகிசுபா முத்கல், சமூக ஆர்வலர் விநாயக்சென் உள்ளிட்டோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:‘நமது நேசத்திற்குரிய நாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்றுவரும் துயரச் சம்பங்கள் அமைதியை விரும்பும் எங்களுக்கு பெரும் வருத்தத்தைத் தருகிறது.‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயக குடியரசு; இங்கே, எல்லாமதம், மொழி, பாலினம், சாதியைச் சேர்ந்த அனைவரும் சமம்’ என்று நம்முடைய அரசியலமைப்புச் சட்டம், வரையறுக்கிறது. ஆனால், 2016-ஆம் ஆண்டு தலித் மக்களுக்கு எதிராக 840 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகமான என்.சி.ஆர்.பி.யில் பார்த்து நாங்கள்அதிர்ச்சியடைந்தோம். மேலும், ஜனவரி1, 2009-ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர்29, 2018-ம் ஆண்டு வரையில் 254 மதவெறுப்பு வன்முறைச் சம்பங்கள் நடைபெற்றுள்ளன. அதில், 91 பேர் உயிரிழந்துள்ளனர். 579 பேர் காயமடைந்துள்ளனர் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மத வெறுப்பு வன்முறைச் சம்பவத்தில் இந்திய மக்கள் தொகையில் 14 சதவிகிதம் மட்டும் உள்ள இஸ்லாமியர்கள்,62 சதவிகித வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அதேபோல, இந் திய மக்கள் தொகையில் 2 சதவிகிதம் மட்டும் உள்ள கிறிஸ்தவர்கள், 14 சதவிகித வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் களாக உள்ளனர். இதில், 90 சதவிகித வழக்குகள் உங்களது (மோடி) அரசு எப்போது ஆட்சிக்குவந்ததோ, அந்த 2014-ஆம் ஆண்டு மேமாதத்துக்குப் பிறகு நடைபெற்றுள்ளது.இதுபோன்ற கும்பல் கொலைகளை நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டித்தீர் கள். ஆனால், அது போதாது. இந்த
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது உண்மையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் பிணை இல்லாத குற்றங்களாக அறிவிக்கப்பட வேண்டும்என்று அழுத்தமாக நாங்கள் கருதுகிறோம்.
அனைவரும் பின்பற்றத்தக்க அந்த தண்டனை உடனடியாக அமலுக்கு வரவேண்டும். கொலைக்குற்றத்துக்கு பரோல் இல்லாத ஆயுள்சிறை தண்டனையாக இருக்கும்போது கும்பல் கொலைக்கு ஏன் அந்தத் தண்டனை இல்லை? முஸ்லிம்கள், தலித் மற்றும்பிற சிறுபான்மையினர் மீது நடத்தப்படும்கும்பல் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
எந்த குடிமகன்களும் அவர்களது சொந்த நாட்டில் அச்சத்துடன் வாழக் கூடாது. துரதிருஷ்டவசமாக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வார்த்தை இன்று ஆத்திரமூட்டும் போர் முழக்கமாக மாறி சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி பல்வேறு பகுதிகளில் அதன் பெயரில் கும்பல் தாக்குதல் நடைபெற காரணமாகியுள்ளது. மதத்தின் பெயரால் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியானது. ராம் என்றபெயர் இந்தியாவின் பெரும்பான்மையினருக்கு புனிதமான பெயர். ராமின் பெயர் தீட்டாகிவிடும் வகையில் நடைபெறும் செயல்களை நீங்கள் தடுத்து நிறுத்தவேண்டும்.எதிர்ப்பு இல்லாமல் எந்த ஜனநாயகமும் இல்லை. அரசுக்கு எதிராக குரல்எழுப்பினால் அவர்கள் தேச விரோதி என்றோ நகர்புற நக்சல் என்றோ அடையாளப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப் படக் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, பேச்சுரிமையை பாதுகாக்கிறது. அரசை எதிர்ப்பது என்பது அதில் ஒரு பகுதி. எனவே, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை எல்லா குடிமகன்களுக்கும் உறுதிப் படுத்த வேண்டும்.ஆளும் அரசை விமர்சிப்பது என்பதுநாட்டை விமர்சிப்பது என்று ஆகாது. எந்த ஆளும் அரசையும் நாட்டுடன் சமப் படுத்த முடியாது. அது, அந்த நாட்டில்உள்ள கட்சிகளில் ஒன்று அவ்வளவுதான். எனவே, அரசுக்கு எதிரான நிலைப்பாடு என்பது தேச விரோதம் கிடையாது.எங்கே, எதிர்ப்புகள் நசுக்கப்படவில்லையோ, அங்கேதான் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது.