tamilnadu

img

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.. ஜிஎஸ்டி குழப்பங்களை முற்றாக களைந்திட வேண்டும்..

புதுதில்லி:
எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில், மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்து அவர்களது வாங்கும் சக்தியை உயரச்செய்யும் விதத்தில் அறிவிப்புகளை செய்திட வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறை களில் உள்ள குழப்பங்களை முற்றாக களைந்திட வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மதுரை மற்றும் தென்தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவும் விதமாக 2019 பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடுசெய்திட வேண்டுமென்றும் அவர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.இச்சந்திப்பில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் முதுநிலைத் தலைவர் எஸ்.இரத்தினவேல், தலைவர் என்.ஜெகதீசன், செயலாளர் ஜெ.செல்வம்,  முன்னாள் மக்களவை உறுப்பினர்  ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பின்போது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பிக்கப்பெற்ற பட்ஜெட்டிற்கான முன் ஆலோசனை மனுவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

சரக்கு மற்றும் சேவை வரி
சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் குறைப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும். 2017 ஜூலை முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் மூலம் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதின் காரணமாக அரசிற்கு தொடர்ந்து வரி வருவாய் அதி கரித்து வந்துள்ளது. 2019 ஏப்ரல் மாதம் அதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு வரி வருவாய் ரூ.1.3லட்சம் கோடியாக பெருகி உள்ளது.

இருப்பினும் இன்னமும் சிமெண்ட், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்பட 28 சரக்குகள் அதிகபட்ச வரி விகிதமான 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ளன. 12 சதவீத வரிக்கு உட்பட வேண்டிய பல்வேறு சரக்குகள் 18 சதவீத வரி விதிப்பிற்கும், 5 சதவீத வரிக்கு உட்பட வேண்டிய சரக்குகள்12 சதவீத வரிக்கும், வரி விலக்கு அளிக்கப்பட வேண்டிய சரக்குகள் 5 சதவீத வரிக்கும் உட்படுகின்றன. இந்த முரண்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்பட வரி விகித குறைப்பு நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும். உடனடியாக 28சதவீத வரி விகிதம் முற்றிலு மாக நீக்கப்பட்டு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற மற்றும் மிக ஆடம்பர சரக்குகள் மட்டுமே உயர்ந்தபட்ச வரி விகிதமான 18 சதவீத வரி விதிப்பிற்கு உட்படுமாறு செய்திட வேண்டும். வரி விலக்கு அளிக்கப்படும் சரக்குகளைத் தவிர மற்ற சரக்குகளுக்கு 5 சதவீதம்,12 சதவீதம் மற்றும் 15சதவீத வரி விகிதங்கள் மட்டுமே ஜிஎஸ்டியில் இருக்க வேண்டும். வருவாய் சமநிலை வரி வீதம் (ரெவின்யு நியுட்ரல் ரேட் - RNR) 15 சதவீதமாக நிர்ண யிக்கப்பட வேண்டும். சேவைகள் மீதான வரி விகிதம் 18 சதவீதம் என்பது பொதுமக்களை மிகவும் பாதிக்கிறது. சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும்.

வரி ஏய்ப்பைத் தவிர்க்க 
ஜிஎஸ்டி போர்டலிலிருந்து விற்பனை பில் எடுத்திட வேண்டும் வரி செலுத்துவோர் தங்கள் விற்பனைக்கு தாங்களாக விற்பனை பில் தயாரித்து உபயோகப்படுத்தாமல், அரசின் ஜிஎஸ்டி போர்ட்டலில் இருந்து விற்பனை பில் ஜெனரேட்செய்து உபயோகப்படுத்தும்படி செய்திட வேண்டும். தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட விற்று முதலுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த நிபந்தனையை அமலாக்கலாம். வரி செலுத்துவோர் மாதந்தோஜிஎஸ்டி போர்டலில் இருந்து விற்பனை பில் ஜெனரேட் செய்யப்படுவதால் கணக்குப் படிவங்கள் ஆன்லை னில் தானாக தயாரிக்கப்பட்டு விடும். வரி செலுத்துவோர் அதனை சரிபார்த்தால் மட்டுமே போதுமானதுறும் பல்வேறு கணக்குப் படிவங்கள் (Returns) சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. . உள்ளீட்டு வரி வரவுச் சலுகை (Input Tax Credit) வரி செலுத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.உள்ளீட்டு வரி வரவு கிடைக்கச் செய்வது ஜிஎஸ்டியின் அடிப்படை நோக்கம். இதனால் வரிக்கு வரி செலுத்துவது தவிர்க்கப்பட்டு ஒருபொருளின் மீதான விற்பனை தொகையின் மீது வரிப்பளு வெகுவாகக் குறைக்கப்பட்டு நுகர்வோர் பயனடைவர். எனவே எந்தவித பாகுபாடு மற்றும் நிபந்தனையும் இன்றி அனைத்து ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கும் உள்ளீட்டு வரி வரவுச் சலுகை கிடைத்திடச் செய்திட வேண்டும். இதன்மூலம் ஜிஎஸ்டி சங்கிலித் தொடர் தடைப்படாமல் இருக்கும்.

ஜிஎஸ்டியில் உள்ள வரி விகித குழப்பங்கள் முற்றிலுமாக களையப்பட வேண்டும்
ஜிஎஸ்டியில் இன்னமும் வரி விகிதங்களில் குழப்பம் நிலவி நீடித்து வருகிறது. ஒரு வணிகர் தனது சரக்கிற்கு 5 சதவீத வரி வசூலித்துஅரசிற்கு செலுத்திவிட்டு ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு அதற்கான வரி விகிதம் 12 சதவீதம் என்று அரசு விளக்கம் கொடுத்தால்அந்த வணிகர் 7 சதவீத கூடுதல் வரியும், அதே அளவு தண்டத் தொகையும், வட்டியும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டு அந்த வணிகர் பெரும்
பாதிப்பிற்குள்ளாவார். இதன் காரணமாகவே பல்வேறு சிறுதொழில் நிறுவனங்களும், சிறிய வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே ஒத்த (Homogeneous) சரக்குகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.உதாரணமாக துணிக்கு (fabric) ஒரு வரியும், அது தைக்கப்பட்டால் கூடுதல் வரியும் என்று நிர்ணயிப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. வரி ஆலோசகர்களால் கூடசரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை. துணிக்கு அது தைக்கப்பட்டிருந்தாலும், தைக்கப்படாமல் இருந்தாலும் ஒரே மாதிரியான வரி விகிதம் நிர்ணயிக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. குழப்பங்களைத் தவிர்த்து தொழில் வணிகத்துறைக்கு முறையாக வரி செலுத்துவதற்காக ஏற்படும் செலவைக் குறைக்க வேண்டும்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் தொழில்வணிகத் துறைக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க முடிவுகள் எடுக்கும் உயர்மட்ட ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில நிதியமைச்சர்களுக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தொழில் வணிகத் துறையினர். மாதம் ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல் செய்து தரும் அவர்களது குறைகளை ஜிஎஸ்டி கவுன்சில் நேரடியாகக் கேட்பதில்லை. இதனால் தான் பல பிரச்சனைகள் தொடர்கின்றன. மாநில நிதி அமைச்சர்கள் தொழில்துறையினரின் கோரிக்கைகளை முறையாக வலியுறுத்துவார்கள் என்று கூற முடியாது. எனவே அனைத்து மாநில முக்கிய தொழில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். அவர்களது குறைகளையும் ஆலோசனைகளையும் கவுன்சில் நேரடியாகக் கேட்க வேண்டும்.

வாங்கும் சக்தி இல்லை
மேலும் மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். வரி விகிதங் களுக்கான வருமான வரம்புகள் சீர்திருத்தி அமைக்கப்பட வேண்டும். வருமான வரி விகிதத்தைக் குறைத்தால் கணக்கில் காட்டப்படாத வருமானம் பெருகுவது தவிர்க்கப்பட்டு, முறையாக வரி செலுத்துவர். மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்து, அவர்களது வாங்கும் சக்தி உயர்ந்து, தொழில்வணிகம் மற்றும் சேவைகள் பெருகிடச் செய்யும். அவற்றின் மூலம் அரசிற்கு கூடுதல் வரி வருமானமும் கிடைக்கும்.மேலும் தங்களது துடிப்பான இளமைப் பருவம் மற்றும் நடுத்தர வயது காலங்களில்கடினமாக உழைத்து தாங்கள் ஈட்டும் வரு மானத்திற்கு வருமான வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் 65 வயதை எட்டியவுடன் பயன்தரக்கூடிய வகை யில் அவர்கள் செலுத்திய வருமான வரித் தொகையின் அடிப்படையில் ஓய்வூதியம் அளிக்கும் ஓர் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும்.