tamilnadu

img

ஓய்வுபெற்ற பிறகு அரசுப் பதவி பெற்றால் நீதிபதிகள் மீது சந்தேகம் வரத்தான் செய்யும்!

புதுதில்லி:
உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டுகாலம் பணியாற்றி, கடந்த புதன்கிழமையன்று பணிஓய்வு பெற்ற நீதிபதி தீபக் குப்தா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில், “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பணி ஓய்வுக்குப் பின்னர், வேறு அரசுப்பதவிகளைப் பெறும்போது, அந்த நீதிபதிகளின் நேர்மை சந்தேகத்திற்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளார். ஓய்வு பெற்றபின் நீதிபதிகள் அரசுப் பதவிகளை பெறக் கூடாது என்றும் கூறியுள்ளார்.உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே. சதாசிவம், பணி ஓய்வுக்கு பிறகு கேரள ஆளுநரானார், உச்சநீதிமன்றத்தில் கடைசியாக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்தநிகழ்வுகள் நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொதுமக்களின் பார்வையை மாற்றியுள்ளதா? என்று கேள்வி எழுப்பப் பட்ட நிலையில், அதற்கு தீபக் குப்தா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

“புத்திசாலித்தனமான நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பஸ்ல் அலி கூட ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் காலம்மாறிவிட்டது. கால மாற்றத்துடன், நீதித் துறை மீதான பார்வையும் மாறிவிட்டது. என்னைப் பொறுத்தவரை, நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே அரசு பணிகளை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் அதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் மனதில் சில சந்தேகங்கள் உள்ளன. சில நியாயமற்ற காரணங்களால் நீதிபதிக்கு இந்தபதவி கிடைத்திருக்கலாம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். இன்றைய உலகில் ஏராளமான மக்கள் கொண்டுள்ளகருத்து இதுதான். இது பல சந்தர்ப்பங்களில் சரியாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனாலும் அது பொது மக்களின் கருத்து. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் பதவிகளை வகிப்பதை நான்விரும்புவதில்லை. பொதுவாக, அவர்கள்அத்தகைய பதவிகளை ஏற்கக்கூடாது என்பதே கருத்து. நானும் அதைச் செய்யமாட்டேன்” என்று தீபக் குப்தா கூறியுள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதிகளால் நிரப்பப்பட வேண்டிய சில பதவிகள் உள்ளதாகவும், குறிப்பாக தீர்ப்பாயங்களில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம் என்றுகூறியுள்ள தீபக் குப்தா, சில நீதிபதிகள் தீர்ப்பாயங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.சிறுபான்மையினர் உட்பட தாழ்த்தப் பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை பாதுகாக்கும் பக்கம் உச்சநீதிமன்றம் நிற்க வேண்டும். அவர்கள் சில விஷயங்களில் அரசாங்கத்துடன் உடன்படாததால் அவர்களின் உரிமை களை பறிக்க முடியாது என்றும் கேள்விஒன்றுக்கு தீபக் குப்தா பதிலளித்துள்ளார்.