tamilnadu

img

வறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘புதிய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்

புதுதில்லி:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரண்டு நாள் பயணமாக தனது மனைவி மெலனியாவுடன் பிப்ரவரி 24-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் தலைநகர் தில்லி மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதையொட்டி ரூ. 100 கோடி செலவில்டிரம்பை வரவேற்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மோடி அரசு, அகமதாபாத்தில் டிரம்ப் பயணிக்கும் சாலையின் ஓரத்திலுள்ள குடிசைப் பகுதிகளை 8 அடி உயர சுவர்கட்டிமறைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் கடுமையாகச் சாடியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜிடிபி டன்களில்மதிப்பிடப்படுகிறது. குடிமக்களின் உரிமை வோல்டுகளில் அளக்கப்படுகிறது. தேசியவாதம் டெசிபல்களில் மதிப்பிடப்படுகிறது. வறுமை சுவரின் உயரத்திலும், நீளத்திலும் இருக்கிறது. இதுதான் பாஜக-வின் புதிய இந்தியா” என்று சாடியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான கவுரவ்வல்லபா அளித்துள்ள பேட்டியில், “மக்களின் நுகர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பது, ஜிடிபி புள்ளிவிவரங்கள், பணவீக்கம்,வேலையின்மை ஆகிய புள்ளிவிவரங் களை மத்திய அரசு மறைத்தது. விவசாயிகளின் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் பண மதிப்பு நீக்கத் தின் உண்மை நிலவரங்களையும் மறைத்தது.

தற்போது வறுமையையும் சுவருக்குப் பின் மறைக்க முயல்கிறது” என்று கூறியுள்ளார். மேலும், “உற்பத்தி சார்ந்த 23 துறைகளில் 16 துறைகள் மோசமாக இருக்கின்றன. ஆனால், அவ்வாறு இல்லை என அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நோய்க்கு மருந்து கொடுக்கும்போது நோய் வந்துள்ளதை ஏற்க வேண்டும். ஆனால், பாஜக அரசு தோல்விகளை ஏற்க மறுக்கிறது” என்று கூறியுள்ள கவுரவ் வல்லபா, “ஒளிந்து கொள்வதும், மறைப்பதும் மத்திய அரசின் வழக்கமான விளையாட்டு” என்றும் “குஜராத் மாதிரி வளர்ச்சி குறித்துப் பேசியவர்கள் எல்லாம் தற்போது வறுமையை சுவருக்குப் பின் மறைக்கிறார்கள்” என்றும் விமர்சித்துள்ளார்.