tamilnadu

img

தி ஒயர் இணைய இதழின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த உத்தரப்பிரதேச அரசு

புதுதில்லி, ஏப்.2- ஏப்ரல் 1 புதன்கிழமை அன்று, பைசாபாத் காவல் நிலையத்தில், ‘தி ஒயர்’ இணைய இதழ் மீது உத்தரப்பிரதேச காவலர் ஒருவர் அளித்திட்ட புகாரின் பேரில் இந்தியத் தண்டனைச் சட்டம் 188 மற்றும் 505(2) ஆகிய பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருக்கிறது. இ.த.ச. 188ஆவது பிரிவு, ‘பொது ஊழியரால் வெளியிடப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தல்’ என்பதைக் குறிக்கிறது. இ.த.ச. 505(2) ஆவது பிரிவு, ‘வகுப்புகளுக்கு இடையே பகைமை, வெறுப்பு அல்லது கெட்ட எண்ணத்தை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் விதத்தில் அறிக்கைகள் வெளியிடுவதைக்’ குறிக்கிறது.

முதல் தகவல் அறிக்கையில், தி ஒயர் ஏட்டில் வெளிவந்த கட்டுரை ஒன்றை அது எந்தத் தேதியில் வெளியானது என்பதையோ அல்லது அதன் தலைப்பையோ குறிப்பிடாமல் கீழ்க்கண்ட வாசகங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறது. “… தப்ளிகி ஜமாத் நிகழ்வு நடைபெற்ற தினத்தன்று, யோகி ஆதித்யநாத், ‘ராம பிரான்’ கொரோனா வைரசிலிருந்து பக்தர்களைப் பாதுகாப்பார் என்று ஆச்சார்யா பரம்ஹன்ஸ் கூறியுள்ள அதேசமயத்தில்,  மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரையிலான ராம நவமி நிகழ்வின்போது அயோத்தியில் திட்டமிட்டபடி மாபெரும் கண்காட்சி வழக்கமான முறையில் நடைபெறும் என்று வலியுறுத்தினார்.

மோடி நாடு தழுவிய முடக்கம் போன்று ஊரடங்கு உத்தரவை மார்ச் 24 அன்று அறிவித்ததற்குப் பின்னர் ஒரு நாள் கழித்து, ஆதித்யநாத் அதிகாரபூர்வ வழிகாட்டுதலை மீறி இருக்கிறார், மக்களை அயோத்தியில் மத விழாவில் பங்கேற்க அழைத்திருக்கிறார். ….” இது தொடர்பாக தி ஒயர் ஏட்டின் நிறுவன ஆசிரியர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அது வருமாறு: “பைசாபாத்தில் உத்தரப்பிரதேச காவல்துறையினர் ‘தி ஒயர்’ ஏட்டிற்கு எதிராக இ.த.ச. 188 மற்றும் 505(2) ஆகிய பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்று சமூக ஊடகங்கள் வழியாக எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கையைப் பார்த்ததிலிருந்து, அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களின் கீழ் பிணைக்கமுடியாது என்பதையும், உண்மை தகவலை வெளியிடுவதற்கான சட்டபூர்வ சுதந்திரத்தை நெரிப்பதைக் குறியாகக் கொண்டிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

உத்தரப்பிரதேசக் காவல்துறையினர், முதல்வரை விமர்சிப்பவர்களுக்குப் பின்னால் போவதே தங்கள் வேலை என்று நினைத்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருப்பது, பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். உச்சநீதிமன்றம், 2019 ஜூனில் டிவிட்டரில் ஒரு பதிவினை ஒரு செய்தியாளர் பதிவு செய்தார் என்பதற்காகச் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு எதிராக கண்டிப்புகள் (strictures) பிறப்பித்திருந்தபோதிலும், அவற்றிலிருந்து யோகி ஆதித்யநாத் அரசாங்கம் எவ்விதமான பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது போன்றே தோன்றுகிறது.  சுதந்திரத்திற்கான உரிமை (right to liberty), ஓர் அடிப்படை உரிமை என்றும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல (non-negotiable) என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். (ந.நி.)