புதுச்சேரி,மே.2-அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டு வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநரை உடனே திரும்பபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எம்.பி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரிக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குதான் அதிகாரம் உள்ளது என மதுரை உயர் நீதிமன்றம் கிளை சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே மத்திய அரசு, ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லை எனில் கிரண்பேடியே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தை பின்பற்றாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படாமல் இருக்க காரணமாக இருந்த மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.இந்த தீர்ப்பையடுத்து, ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று நியமன எம்.எல்.ஏக்களின் நியமனத்தையும் ரத்து செய்ய வேண்டும். நியமன உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும். இலவச அரிசிபுதுச்சேரியில் இலவச அரிசி போட முதலமைச்சர் நாராயணசாமி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இத்திட்டத்தை உடனே நடை முறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், பெருமாள், பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.