ஆலப்புழா:
வெளிநாடுகளிலிருந்து வேலை இழந்து நாடு திரும்பும் கேரளியர்களுக்கான மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ‘காய்கறி இயற்கை விவசாயம்’ திட்டத்தை வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் தொடங்கி வைத்தார்.கேரளத்திலிருந்து சென்று வெளிநாடு களில் வேலை பார்க்கும் சுமார் 5 லட்சம் பேர் நாடு திரும்ப பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை வேலை இழந்தவர்கள். அவர்களுக்கு கேரளத்தில் வேலை வாயப்புகளை உருவாக்க பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சுமார் ஒன்றேகால் லட்சம் எக்டேர் தரிசு நிலங்களை கண்டறிந்து விவசாயம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆலப்புழா மாவட்டம் கஞ்ஞிக்குழியில் இயற்கை முறையில் காய்கறி விவசாயம் செய்யும் திட்டத்தை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் வியாழனன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தேவதர்சனம் மது ரவிச்சந்திரன் என்பவரது 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்யப்பட உள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் பி.திலோத்தமன், மக்களவை உறுப்பினர் ஏ.எம்.ஆரிப், கஞ்ஞிக்குழி பஞ்சாத்து தலைவர் எம்.ஜி.ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.