புதுதில்லி:
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் கிராம நிலையங்கள் அமைக்காத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களிலும் கிராம நிலையங்கள் அமைக்காததை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும்2,500 கிராம நிலையங்கள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். மாறாக 208 மட்டுமே தற்போது வரை அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இதில் 11 மாநிலங்கள் மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து கடந்த செப்டம்பர் 2ஆம் தேதியன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கிராமநிலையங்கள் அமைக்கப்பட்டது தொடர்பாகவிளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இந்த வழக்கின் மீதானவிசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா முன்பு புதன்கிழமையன்று நடைபெற்றது. அப்போது கிராம நிலையங்கள் அமைப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அசாம், குஜராத், ஹரியானா, ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும்மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் கிராம நிலையங்கள் விவகாரம் தொடர்பாக நான்கு வாரத்துக்குள்ளாக உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.