tamilnadu

img

போர்க்கால அடிப்படையில் தீர்வு காண்க! மத்திய அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை

புதுதில்லி, ஏப்.4- மக்களின் பிரச்சனைகளுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடி யாகத் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசை, இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் து. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சி சார்பில் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 என்னும் கொரோ னா வைரஸ் தொற்றைக் கட்டுப்ப டுத்துவதற்காக, நாடு தழுவிய அளவில் அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்திருக்கிறது. இது தொடர்பாக ஏராளமான பிரச்சனைகள் கூர்மையான முறை யில் வெளிவந்திருக்கின்றன.

இவற்றை உடனடியாகவும் அவசரமாகவும் தீர்க்க வேண்டியது அவசியமாகும். இவற்றை அரசு செய்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் இவை தொடர்பாக சரி செய்திடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. கோடானு கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் நகர்ப்புறங்களிலிருந்து வெளியேறுவது, இந்தத் திடீர் ஊரடங்கு தீர்க்கப்படாத மக்களின் வாழ்வாதாரங்களின் அளவினைக் காட்டியிருக்கிறது. பசி-பஞ்சம்-பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மை விரிவான முறையில் பரவுவதை நிறுத்த வேண்டியது உடனடித் தேவையாகும். இவ்வாறு மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களிடம் மிக எளிதாக கொரோனா வைரஸ் தொற்றிவிடும். அனைத்து ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், முறைசாராத் தொழிலாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட 5000 ரூபாய் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் ஏழைகள் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 35 கிலோ உணவு தானியங்கள், அவர்களிடம் ரேசன் கார்டுகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அளித்திட வேண்டும். இதற்கு இந்திய உணவுக் கழகத்திடம் இருப்பில் உள்ள 7.5 கோடி டன் உணவு தானியங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் புலம்பெயர்ந்து சென்றுள்ள தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் அவர்கள் இருக்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் வலுவான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் தனிமைப்படுத்தும் வசதிகளை நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் செய்து தர வேண்டும். புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் மீது போலீசார் கொடூரமான முறையில் நடந்துகொள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். அவ்வாறு நடந்துகொள்ளும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நகரப்புறங்களில், குறிப்பாக சேரிப் பகுதிகளில், தேவைப்படும் மக்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை உடனடியாக அளித்து அவர்களை பசி-பஞ்சம்-பட்டினியிலிருந்தும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்தும் தடுத்திட வேண்டும். இரு அறுவடைக் காலம், விவசாயிகள் விளைந்த பயிர்களை அறுவடை செய்வதற்கு உதவிட வேண்டும். விளைந்த பயிர்கள் வீணாகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது உணவுப் பாதுகாப்புக்கு அவசியம். இந்திய உணவுக் கழகம் விளைந்த பயிர்களை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்து, விவசாயிகள் அவற்றை அடிமாட்டு விலைக்கு விற்பதிலிருந்து தடுத்திட வேண்டும்.  மாநிலங்களிலும் ஏராளமான வேலைகள் நடைபெற வேண்டியிருக்கிறது. மாநில அரசுகள் ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருக்கின்றன. மேலே கூறியவாறு பணிகளை மேற்கொள்ளக்கூடிய நிலையில் அவை இல்லை.

அவற்றிற்கு மத்திய அரசு தாராளமாக உதவிட வேண்டும். மாநிலங்கள் கடன் பெறும் வரம்பை உயர்த்திட வேண்டும். இவற்றில் கோடானுகோடி நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் அடங்கி இருக்கின்றன. ஊரடங்கின் காரணமாக, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாநிலங்களிடையே அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் தொடர்பாக தெளிவான உத்தரவு இல்லை. இதனை உடனடியாக சரி செய்திட வேண்டும். மக்களின் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் அவர்களுக்குக் காலத்தே கிடைத்திட வேண்டும். மிகவும் தைரியமாக கடமைகளைச் செய்துவரும் சுகாதார ஊழியர்களுக்கு, அவர்கள் தங்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுத்துக்கொள்வதற்கு உதவிடும் விதத்தில் போதுமான அளவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அளிக்கப்படவில்லை என்று புகார்கள் வருவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

அவர்களுக்கு வென்டிலேட்டர் போன்ற முக்கியமான உபகரணங்களை உடனடியாக அளித்திட வேண்டும். இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளுக்கு உயிர்போகும் நிலையில் வரும் மக்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படக் கூடாது. இவ்வாறு வந்த நோயாளிகள் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் இதுவரை 43 பேர் இறந்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பெரிய அளவில் சோதனைகள் செய்யப்பட வேண்டும். இந்த வைரஸ் அதிகமாக இருக்கும் இடங்களைக் கண்டறிந்து அந்தப் பகுதியைத் தனிமைப்படுத்திட வேண்டும். அங்குள்ள மக்களுக்கு முறையாக சிகிச்சை அளித்திட வேண்டும். ஐசிஎம்ஆர் (ICMR) எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், தற்போது ஒரு சோதனைக் கருவிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இக்கருவியை நாடு முழுவதும் பெரிய அளவில் அளித்திட வேண்டும். தற்சமயம் இவ்வாறு சோதனை செய்யும் விகிதம் உலகில் மிகவும் கீழ்நிலையில் இருக்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தென் கொரியாவைவிட 241 மடங்கு கீழ்நிலையில் இந்தியா இருக்கிறது. தப்ளிகி ஜமாத்தில் மக்கள் திரண்டது தொடர்பாக மதவெறி அடிப்படையில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு பிரச்சாரத்தில் மதவெறித் தீயை விசிறிவிடுவது, இந்த நோய்க்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கும் மக்களைப் பிளவுபடுத்திடும். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இந்நோயை ஒழித்துக் கட்டுவதற்கு ஊறு விளைவித்திடும். இந்நோய்க்கு ஆளானவர்களை கிரிமினல் நோயாளிகள் போல் பார்க்காது இதனைச் சரிசெய்திட வலுவான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். போலி செய்திகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அறிவியல் உண்மைகளைப் பரப்பிட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று அதனை முறியடித்திட வேண்டும். இதற்கு உத்தரவாதம் அளித்திடும் விதத்தில் மத்திய அரசு அவசரகதியில் தலையிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.        (ந.நி.)