tamilnadu

img

மோடிக்கு எதிராக பேசியதால் ஏவிவிடப்பட்ட வருமான வரித்துறை? பழிவாங்கப்படும் தேர்தல் ஆணையரின் குடும்பம்..

புதுதில்லி:
இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா குடும்பம் மீது விசாரணை நடத்துமாறு, ஹரியானா மாநில பாஜக அரசிடம், வருமான வரித்துறை கோரிக்கை வைத்துள்ளது.தில்லிக்கு அருகே உள்ள ஹரியானாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவி நாவல் லவாசா தன்னுடைய கணவரின் சகோதரி சகுந்தலாவுக்கு விற்பனை செய்துள்ளார். இந்தப் பரிமாற்றத்தில்தான், முத்திரைத்தாள் கட்டண விஷயத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதுகுறித்து விசாரிக்குமாறும், ஹரியானா மாநில கூடுதல் தலைமைச் செயலாளருக்கும், நிதி ஆணையருக்கும் மத்திய வருமான வரித்துறை கடிதம் எழுதியிருக்கிறது. 

ஹரியானாவின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிதி ஆணையர் தன்பத் சிங், இதுகுறித்த கடிதம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி வருமான வரித் துறையிடம் இருந்து பெறப்பட்டதாக தெரிவித்துள்ளார். டிசம்பர் 9 ஆம் தேதி இந்த கடிதத்தை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.இதனிடையே தங்கள் மீதான நடவடிக்கை குறித்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள அசோக் லவாசா குடும்பத்தினர், “குறிப்பிட்ட அந்த பரிமாற்றத்தில் உரிய முத்திரைத் தாள் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறை உண்மையை அறிய முயலலாம். ஆனால் இப்படி செய்திகளைக் கசியவிடுவது என்பது எங்கள் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுப்பதற்கானதாகவே தோன்றுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா மீதான ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதாக துணிந்து குற்றம் சாட்டியவர் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆவார். ஆனால், தனது குற்றச்சாட்டுக்களை சக அதிகாரிகளான சுனில் அரோரா, சுஷில் சந்திரா ஆகியோர்ஏற்காததால், “இனி தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை” என்றும் அப்போது அசோக் லவாசா பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில், மோடியை எதிர்த்த, தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவை பழிவாங்கும் விதமாகவே மத்திய பாஜக அரசு வருமான வரித்துறையை ஏவி விட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.