புதுதில்லி:
பயங்கரவாதிகளுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள், மோடி ஆட்சிக்கு முன்பும் நடந்துள்ளன என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி டி.எஸ். ஹூடா தெரிவித்துள்ளார்.
முன்னாள் லெப்டினெண்ட் ஜெனரலான டி.எஸ். ஹூடா, வேறு யாருமல்ல, பிரதமர் நரேந்திர மோடி, ‘தனது ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்டது’ என்று பெருமை பீற்றிக்கொண்ட 2016-ஆம் ஆண்டின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை முன்னின்று நடத்தியதே இவர்தான்.
மோடியின் ஆட்சிக்கு முன்னதாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதா? என்று காங்கிரஸ் - பாஜக இடையே வார்த்தைப் போர் நடந்துவரும் நிலையில், டி.எஸ். ஹூடா ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “சர்ஜிக்கல் ஸ்டிரைக் அல்லது எல்லைச்சண்டைகள் கடந்த காலங்களிலும் ராணுவத்தால் நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் நடைபெற்ற இடங்களும், தேதிகளும் தற்போது எனக்கு சரியாக தெரியவில்லை என்று கூறியிருக்கும் ஹூடா, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, தேர்தல் காலங்களில் ராணுவத்தை தங்கள் கட்சிக்காக பயன்படுத்துவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.