tamilnadu

img

வங்கி சாரா நிதிநிறுவனங்களை ஒழுங்குபடுத்திட மத்தியச் சட்டம் கொண்டு வர இளமாரம் கரீம் வலியுறுத்தல்

நாடு முழுதும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்திட, மத்தியச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இளமாரம் கரீம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய் அன்று மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் இளமாரம் கரீம் பேசியதாவது: வங்கி சாரா நிதி நிறுவனங்களில் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் நாடு முழுதும் பணிபுரிந்து வருகிறார்கள். பல நிதிநிறுவனங்கள் அதீத லாபத்துடன் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் நம் பொருளாதார அமைப்பின் முக்கியமான ஓர் அங்கமாக மாறியிருக்கின்றன. ஆனாலும், இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நிலைமையோ நல்ல நிலைமையில் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானதாகும். இந்நிறுவனங்களில் பணிபுரியம் ஊழியர்களின் ஊதியம் மற்றும் பணிநிலைமைகள் குறித்து சட்டரீதியான நெறிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் இந்நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஊழியர்களை வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றன, ஊதியங்களும் இஷ்டம் போல் வழங்கிக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்ச ஊதியம் என்றோ, பணி நேரங்கள் குறித்தோ எவ்வித வரையறையும் கிடையாது. இவற்றின் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எதுவும் கிடையாது. இவற்றில் நல்ல கல்வித் தகுதியுடன் இருக்கின்ற இளம் பெண்களும் இளைஞர்களும் அதிகமான அளவில் பணிபுரிந்து வருகிறார்கள்.

வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில், முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழியர்களின் வேலைநிறுத்தம் நல்லதொரு எடுத்துக் காட்டாகும்.

இந்தியாவில் செயல்படும் வங்கி சாரா நிதிநிறுவனங்களில் முத்தூட் ஃபைனான்ஸ், மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவன ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பாக நிலையாணையும் எதுவும் கிடையாது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சனை தொடர்பாக கேரள மாநில அரசும், உயர்நீதிமன்றமும் தலையிட்டும்கூட, நிர்வாகம் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்திடத் தயங்குகிறது. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர், “எந்தச் சட்டமும் என்னைக் கட்டுப்படுத்தாது,” என்றும், “பிரதமரே சொன்னால்கூட குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த மாட்டேன்,” என்றும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

முத்தூட் ஃபைனான்ஸ் ஓர் எடுத்துக்காட்டுதான். அநேகமாக வங்கி சாரா நிதிநிறுவனங்கள் அனைத்தின் நிலைமைகளும் கிட்டத்தட்ட இதேதான். எனவே இவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திட ஒரு மத்தியச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதும், அதன்மூலம் ஊழியர்களின் பணி நிலைமைகள் மற்றும் ஊதியங்கள் வரையறுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும். சட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பணி நேரங்கள் வரையறுக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஏழை ஊழியர்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் கிடைத்திடும்.

எனவே இதற்கென ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அரசை நான் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு இளமாரம் கரீம் கூறினார்.

(ந.நி.)