மார்க்சியத்திற்கு பெரியார் செய்த தொண்டு - 4
பெரியாரின் சமதர்மப் பிரச்சாரத்தையும், அரசாங்க - விரோதப் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் கவனித்து வந்த ஆங்கிலேய அரசாங்கம் அவரை கைது செய்வதற்காக ஒரு வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தது. அதுவும் விரைவில் வந்தது.
1933 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதிய இதழில் ‘இன்றைய ஆட்சி என் ஒழிய வேண்டும்’ என்ற தலைப்பில் ‘குடி அரசில்’ தலையங்கம் வெளியானது. அதில், “மக்களின் வரிப்பணம் பெரிதும் செல்வந்தர்களுக்கே செலவிடப்படுகிறதென்றும், அது ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் செலவிடப்படுவதில்லையென்றும் விமர்சனம் செய்திருந்தது. பிஏ, எம்ஏ, படித்தவர்கள் 15 ரூபாய், 20 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் திணறும்போது அரசாங்க நிர்வாகங்களில் 500, 1000, 5000 என்று சம்பளங்களை அள்ளிக்கொடுப்பதென்றால் இப்படிப்பட்ட அரசாங்கமும், நிர்வாகமும் பாமர ஏழை மக்களைச் சுரண்டும் கூட்டுக் கொள்ளை ஸ்தாபனம்தானே. இன்றைய ஆட்சியை அழிக்க வேண்டுமென்பதற்கு இது ஒரு உதாரணமல்லவா” என்று அந்தத் தலையங்கம் கேட்டது. இந்த அரசாங்கமானது முதலாளித்துவ அரசாங்கம் என்றும், அதன் கல்வியின் தத்துவமும், கல்வி இலாகாவும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும் கிடைக்கும்படியாக அமைந்துள்ளதென்றும் அந்தத் தலையங்கம் குற்றஞ்சாட்டியது.
இதைக் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் பெரியாரையும், அந்த குடியரசு ஏட்டின் வெளியீட்டாளரான அவர் சகோதரி கண்ணம்மாவையும், டிசம்பர் 20ஆம் தேதி கைது செய்து கோவை சிறையில் அடைத்தது. இவ்விருவர் மீதும் ராஜத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நீதிமன்றத்தில் பெரியார் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்:
‘இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதானது, தமது ‘சமதர்மப் பிரச்சாரத்தை நிறுத்துவதற்காக’ முதலாளி சர்க்காரோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்குமென்ற முடிவுக்குத் தான் வர வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.’ (புரட்சி ஏடு 4.2.1934)
ஆனால் நீதிமன்றம் இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து 1934ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெரியாருக்கு 6மாத கடுங்காவல் தண்டனையும், 300 ரூபாய் அபராதமும் விதித்தது. கண்ணம்மாளுக்கு மூன்று மாதம் சிறை வாசமும், 300ரூபாய் அபராதமும் விதித்தது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதகாலம் வெறும் காவல் தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருவரும் அபராதம் செலுத்த மறுத்து, சிறைச்சாலை சென்றனர்.
இதே சமயத்தில் அரசாங்கம் வேறொரு அடக்குமுறையையும் கையாண்டது. அதன் காரணமாக குடியரசு நிறுத்தப்பட்டு விட்டது. புரட்சி என்ற பெயரில் புதிய பத்திரிகை வெளியானது. அதற்கு இடையூறு ஏற்பட்டு பகுத்தறிவு என்ற பெயரில் பத்திரிகை வெளிவந்தது. அதுவும் அடக்குமுறை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. கோவை சிறையில் பெரியாரும், வேலூர் பெண்கள் சிறையில் கண்ணம்மாவும் அடைக்கப்பட்டனர்.
அச்சமயத்தில் கோவை சிறையில் காங்கிரஸ் தலைவர் ராஜாஜியும் தண்டிக்கப்பட்ட கைதியாக இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். ராஜாஜியின் நோக்கம் முழுவதும் பெரியாரை எப்படியாவது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதாக இருந்தது. காங்கிரசோடு இணைந்து செயல்பட பெரியாருக்கும் சம்மதமே, ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். தான் ஒரு வேலைத்திட்டத்தை தருவதாகவும், அதை காந்திஜி ஏற்றுக் கொண்டால் காங்கிரசோடு சேர்ந்து பணியாற்ற சம்மதிப்பதாகவும் தெரிவித்தார். ராஜாஜியும் அதை ஏற்றுக் கொண்டார். அதன்படி பெரியார் ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்து அதை ராஜாஜியிடம் கொடுத்தார். அதில் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி அரசியல் பிரதிநிதித்துவமும் வேலை வாய்ப்பும், கொடுக்கப்பட வேண்டுமென்று பெரியார் கோரியிருந்தார். ஆனால் காந்தி அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.
தண்டனைக் காலம் முடிந்து 1935ஆம் ஆண்டில் இருவரும் விடுதலையாகினர். அவ்வாண்டு நவம்பர் மாதத்தில் மத்திய சட்டசபைக்கு (இன்றுள்ள மக்களவை போல்) தேர்தல் வரவிருந்தது. பெரியார் ஒரு புதிய வேலைத் திட்டத்தை வெளியிட்டார். அது ஈரோட்டுப் பாதையையும், சிறையில் ராஜாஜியிடம் கொடுத்த வேலைத்திட்டத்தைப் போன்றும் இருந்தது. பெரியார் ஒரு அறிவிப்புச் செய்தார். இந்த புதிய வேலைத்திட்டத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதாகவும் கூறி அதை காங்கிரஸ் கட்சிக்கும், நீதிக்கட்சிக்கும் அனுப்பினார். காங்கிரஸ் கட்சி அதை ஏற்கவில்லை. நீதிக்கட்சி அதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. எனவே பெரியார் நீதிக்கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.
பெரியாரின் இந்தப் போக்கிற்கு அவருடைய சுயமரியாதை இயக்கத்திற்குள் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் இந்த முடிவு தவறானது, நீதிக்கட்சி பிற்போக்கான கட்சி, ஆங்கிலேயரை ஆதரிக்கும் கட்சி என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கூறியதை ஏற்க பெரியார் மறுத்துவிட்டார்.
நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
இந்தியாவில் உருவாகிவரும் இளம் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்று முடிவெடுத்த ஆங்கிலேய அரசாங்கம் 1934 ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தாற் போல் இந்தியாவில் சோசலிச, கம்யூனிச பிரச்சாரம் செய்து வந்த சுயமரியாதை சமதர்ம கட்சியையும், தாக்குவதற்கு அது திட்டமிட்டது.
இதைத் தொடர்ந்து அக்கட்சியின் அச்சகமான ‘உண்மை விளக்கும் பிரஸ்’ என்ற அச்சகம் வெளியிட்ட பலஅரசியல் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று பகுத்தறிவு நூல் பதிப்புக்கழகம் வெளியிட்ட நான் ஏன் நாத்திகனானேன்? புரட்சி வீரர் பகத்சிங் எழுதியிருந்த இந்த நூலை மொழியாக்கம் செய்த ஜீவாவையும், இந்நூலை பதிப்பித்த பெரியாரின் அண்ணன் ஈ.வே.கிருஷ்ணசாமியையும், 1935ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் நாள் காவல்துறை கைது செய்தது. அவ்விருவர் மீதும் ராஜத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு, விசாரணையில் இருக்கும் போதே பெரியார் மீது ஆங்கிலேய அரசாங்கம் பல்வேறு நிர்பந்தங்களை செலுத்தியது. அவர் சோசலிசப் பிரச்சாரத்தைக் கைவிடவில்லையென்றால் அவரது இயக்கம் தடை செய்யப்பட்டு ஒடுக்கப்படும் என்று பெரியாரின் நீதிக்கட்சி நண்பர்கள் மூலம் ஆங்கிலேய அரசாங்கம் பயமுறுத்தியது. இது பெரியாரை பெரும் கவலையில் ஆழ்த்தியது. பெரியார் சிறைக்குச் செல்ல அஞ்சியவர் இல்லை. ஆனால் அவரது இயக்கம் நிறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே சோசலிசப் பிரச்சாரத்தைக் கைவிட்டு ஆங்கிலேய அரசாங்கத்தை ஆதரிக்க முடிவு செய்தார். மார்ச் 10ஆம் தேதியன்று பின்வரும் அறிக்கையை அவர் குடியரசில் வெளியிட்டார்.
‘சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பதும் அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் சமுதாய இயலில் சாதிமத பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் பொருளியலில் சமதர்மமுமேயாகும். இவை பற்றிய விஷயங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்யவும், அமலுக்குக் கொண்டு வருவதுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயமாகும்.’
பெரியார் இந்த அறிக்கை வெளியிட்டது மட்டுமல்ல, நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற புத்தகத்தை மொழியாக்கம் செய்ததற்காகவும், அச்சிட்டு வெளியிட்டதற்காகவும், ஜீவாவையும், தன் அண்ணன் கிருஷ்ணசாமியையும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலையாகும்படி கூறினார். இதைக்கேட்டு ஜீவா பெரும் ஆத்திரம் கொண்டார் என்ற போதிலும், கட்சித் தலைவர் கட்டளைக்கிணங்க அவ்வாறு எழுதித்தர வேண்டியதாயிற்று. அவ்வாறே இருவரும் விடுதலை பெற்றனர். அவர்கள் இருவரும் அவ்வாறு செய்ததற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறி, பெரியார் பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்.
‘இந்தப்படி இரு தோழர்களும் வருத்தம் தெரிவித்து விடுதலை அடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மை அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்’ ‘இந்த வருத்தம் தெரிவித்ததும், அதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும், இந்த வழக்கைப் பொருத்து மாத்திரம் அல்ல, என்பது இதில் முக்கிய விஷயமாகும். (குடியரசு : 31.3.1935)
பெரியார் எடுத்த ஆங்கிலேய ஆதரவு நிலைபாட்டை ஜீவா, சிங்காரவேலர் மற்றும் சோசலிச நோக்கம் கொண்ட அந்த இயக்கத்தவர் கடுமையாக ஆட்சேபித்தனர். இதைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சோசலிச சமதர்ம மாநாட்டில் ஜீவாவுக்கும் பெரியாருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. போகிறவர்கள் இயக்கத்தை விட்டுப் போகலாம் என்று பெரியார் முடிவாகக் கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து ஜீவாவும், இதர தோழர்களும் அந்தக் கட்சியிலிருந்து வெளியே வந்து சிங்காரவேலரின் வழிகாட்டலுடன் சுயமரியாதை சோசலிசக் கட்சியை உருவாக்கினர்.
பெரியார் 1925ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சுயமரியாதை இயக்கத்தை நடத்த ஆரம்பித்தார். 1927ஆம் ஆண்டு முதல் நாத்திகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இடையில் 1932 முதல் 1934 ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க சோசலிசப் பிரச்சாரம் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளிட்டு மார்க்சிய நூல்களை முதன் முதலில் தமிழில் வெளியிட்டார். ஆனால் அவரது வாழ்நாள் முழுவதிலும் அவர் நாத்திகராகவே இருந்து நாத்திகப் பிரச்சாரத்தையும், கடவுள் மறுப்பு பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்தார். இந்த நாத்திகப் பிரச்சாரமானது மார்க்சியத்திற்கு உதவிய பிரச்சாரமாகும்.
ஏனென்றால் மார்க்சியத்தின் தத்துவமான இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்பது முழுக்க முழுக்க விஞ்ஞானப்பூர்வ நாத்திகத்தை அடிப்படையாக கொண்டதாகும். இயற்கைதான் முதன்மையானது, அதை கடவுள் என்று யாரும் படைக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டது இயக்கவியல் பொருள் முதல்வாதம். பிள்ளையார் சிலை உடைப்பு போன்ற சில பிறழ்வுகள் அவர் இயக்கத்தில் இருந்தபோதிலும், பெரியார் 20ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த நாத்திகராகத் திகழ்ந்தார் என்பது வரலாற்று உண்மை. இதன்மூலம் அவர் சர் சார்லஸ் பிராட்லா, இங்கர்சால் பெட்ரண்ட் ரஸ்ஸல் போன்ற உலகப் புகழ்பெற்ற நாத்திக அறிஞர்கள் வரிசையில் இடம்பெறுகிறார்.
... நிறைவு