tamilnadu

img

ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை சீர்குலைக்காதே! நவ. 4 சிறப்பு மாநாடு

புதுதில்லி:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  உறுதிச் சட்டம்நவம்பர் 4 அன்று சிறப்பு மாநாடு  புதுதில்லியில் நடைபெறுகிறது. இது தொடர்பாக சங்கததின் தலைவர் எஸ். திருநாவுக்கரசு, பொதுச் செயலாளர் ஏ. விஜயராகவன் மற்றும் இணைச் செயலாளர் சுனீத் சோப்ரா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் வேலையில்லாக் கொடுமை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது அதிகரித்திருக்கிறது. எனவே ஆட்சியாளர்களின் முழுமுதற்கடமை வேலையில்லா இளைஞர்களுக்கும் மற்றும் திறமைக்கேற்ற வேலை கிடைக்காமல் குறைந்த ஊதியத்தில் வேலையில் இருப்பவர்களுக்கும் உரிய வேலை அளிப்பது என்பதேயாகும்.அதேபோன்று, ஐமுகூ அரசாங்கம் இருந்த சமயத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்கம் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் நீண்ட போராட்டங்களின் விளைவாக,  கிராமப்புறஏழை மக்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புறவேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கொண்டுவரப்பட்டது.இந்தச் சட்டம் ஒரு முக்கியமான நடவடிக்கை யாகும். உண்மையில் இந்தச் சட்டமே கிராமப்புற உழைப்பாளி மக்களுக்குப் போதுமான அளவிற்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்றபோதிலும் தற்போது இச்சட்டத்தின்கீழ் கூறப்பட்டுள்ள விதிகளைக்கூட ஆட்சியாளர்கள் சரிவரக் கடைப்பிடிப்பதில்லை. இச்சட்டத்தின்கீழ் நாட்டில் சுமார் 13 கோடிக்கும் அதிகமான அளவில் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்காக விண்ணப்பித்துள்ளபோதிலும் வேலைகோரும் அனைவருக்கும் வேலை அளிப்பதில்லை.  

 வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள், நிழற்குடைகள் மற்றும் குடிதண்ணீர் முதலானவைகளை அளிப்பதில்லை.எல்லாவற்றையும் விட மிக மோசமான அம்சம், செய்த வேலைக்கு ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதியமே அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கும் கொடிய நிலை.  இவற்றை முன்னிறுத்தி எதிர்கால நடவடிக்கை களைத் திட்டமிடுவதற்காக இச்சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. சிறப்பு மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்  கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, உ.பி., பீகார், கர்நாடகம், மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற் கிறார்கள். சிறப்பு மாநாட்டில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்களுடன்  தொழிற்சங்கங்கள், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் தலைவர்களும் உரையாற்றுகிறார்கள். (ந.நி.)