அலகாபாத்:
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர் கபீல்கான், குற்றமற்றவர் என்று, ஆதித்யநாத் அரசு அமைத்த, விசாரணை ஆணையமே தற்போது அறிக்கை அளித்துள்ளது.
இதன்மூலம், கபீல் கான் மீதான உத்தரப்பிரதேச அரசின் முந்தைய குற்றச்சாட்டு பொய்யானது என்பதை உத்தரப்பிரதேச அரசே ஒப்புக் கொண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியாகின. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு நீண்டகாலமாக, கட்டணப் பாக்கிவைத்திருந்ததால், மருத்துவமனையில், தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு இல்லை என்றும்; ஆக்சிஜன் பற்றாக்குறையே குழந்தைகள் இறப்புக்கான உடனடி காரணம் என்றும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், மாநிலத்தை ஆளும் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசோ, குழந்தைகள் இறப்புக்கு அங்கிருந்த குழந்தைகள் நல மருத்துவர் கபீல் கானை பலிகடா ஆக்கியது. அவரது அலட்சியமே குழந்தைகள் இறக்கக் காரணம் என்று குற்றம் சாட்டியது.உண்மையில் கபீல் கான், தனது சொந்தப்பணத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வைத்து, பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர். அதனாலேயே தாய்மார்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர்.ஆனால், தன்மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காகவும், கபீல் கான் ஒரு இஸ்லாமியர் என்பதால் பழியைஅவர்மீது போட்டுவிடவும் முடிவுசெய்து, ஆதித்யநாத் அரசு மோசமாகநடந்து கொண்டது. கபீல் கானை கைதுசெய்து, 9 மாதங்கள் ஜாமீனே வழங்காமல் சிறையில் அடைத்தது. சிறையில் கபீல் கானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, உரிய சிகிச்சையும் கூட அளிக்கவில்லை. “குழந்தைகள் மரணத்திற்கு கபீல் கான்-தான் காரணம் என்பதற்கு எந்த ஒரு சாட்சியமும் இல்லை; அவர் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் தெரியவில்லை” என்று அலகாபாத் உயர் நீதிமன்றமே கூறியும், அது பாஜக அரசின் காதுகளில் விழவில்லை. “ஆக்ஸிஜன் விநியோகிக்கும் நிறுவனத்துடன் கபீல் கான், வர்த்தகத் தொடர்பில் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று நீதிமன்றம் கேட்டதற்கும் பதிலில்லை.
இந்நிலையில்தான், 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர் கபீல் கான் குற்றமற்றவர் என்று, ஆதித்யநாத் அரசு அமைத்த விசாரணை ஆணையமே தற்போது அறிக்கை அளித்துள்ளது.கபீல் கானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, இதுதொடர்பான 15 பக்க விசாரணை அறிக்கையில், “மருத்துவர்கபீல் கான், நிலைமையை கட்டுக்குள்கொண்டுவரத்தான் பாடுபட்டார்; மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைவாக இருக்கிறது என்று முன் கூட்டியே அவர்
எச்சரிக்கை செய்தார்; அவரே சொந்த செலவில் உபகரணங்களை வாங்கி குழந்தைகளைக் காக்கப் போராடினார்” என்று ஆதித்யநாத் அரசு ‘புகழாரமும்’ சூட்டியுள்ளது.
கபீல் கான் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹிமான்ஷூகுமார் தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு, அதனடிப்படையிலான அறிக்கையை 2019 ஏப்ரல் மாதமே மாநில அரசிடம் சமர்ப்பித்து விட்டது. ஆனால் 4 மாதங்கள் கழித்தே ஆதித்யநாத் அரசு, அதனை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.இதனிடையே, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது பற்றி மருத்துவர் கபீல் கான் பேட்டி அளித்துள்ளார் அதில், “நான் ஒரு மருத்துவராக என்ன செய்ய வேண்டுமோ, அதை என்னால் முடிந்த அளவு செய்தேன். ஆனால், என் மீது களங்கம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். எனது குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டனர். எனது வேலையை இழந்தேன். ஆனால்,இப்போது என் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பது வெளியாகியுள்ளது; இதற்காக அரசு மன்னிப்பு கோர வேண்டும்” என்று கூறியுள்ளார்.மேலும், “இவ்விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், இந்த விவகாரத்தில், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.