tamilnadu

img

காஷ்மீர் பெண்கள், குழந்தைகளின் கதறல் கேட்கவில்லையா?

புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீர் மாநில பெண்கள்,குழந்தைகளின் கதறல், இந்திய மகளிர் ஆணையங்களின் காதுகளில் கேட்கவில்லையா? என்று காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி இல்டிஜா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் மகளிர் ஆணையங்கள் இருக்கின்றனவா? என்றும் அவர் கேள்விக்கணை தொடுத்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஆகஸ்ட் 4 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் மிகமோசமாக பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள்தான். இவர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனை யாரும் காதுகொடுத்துக் கேட்டுவிடாதபடியும் பல்வேறு தடைகளை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, ஜம்மு - காஷ்மீர் மக்களின் வேதனையை,தங்களது ஆட்சியின் வெற்றியாக வெளிநாடுகளிலும் மோடி அரசு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில்தான், ஜம்மு - காஷ்மீர் விஷயத்தில் ஆரம்பம் முதல் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் மாணவியும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகளுமான இல்டிஜா முப்தி, இந்திய மகளிர் ஆணையங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பாக, தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இல்டிஜா முப்தி கூறியிருப்பதாவது:
“நான் இல்திஜா, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் மகள். சிறப்பு வரையறை சட்டம் நீக்கப்பட்டு 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். காஷ்மீரில், குழந்தைகள், பெண்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிப்படை சுதந்திரமும், அத்தியாவசியமான தேவைகளாகக் கருதப்படும் ஊட்டச்சத்
தும், கல்வியும், மருத்துவமும் எங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. இவ்விஷயத்தில், உள்துறைச் செயலாளரிடமிருந்தும், ஜம்மு - காஷ்மீர் தலைமை செயலாளரிடமிருந்தும் சில தகவல்களை நாடினேன். எனது மின்னஞ்சலில் அதன் உள்ளடக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களிடமிருந்து இன்னும் ஒரு பதிலைக் கூட பெறவில்லை.

ஆண்களின் அதிகார விளையாட்டுக்கு மத்தியில் பெண்களாகிய நாங்கள் எவ்வாறு நெருப்புக்கு மத்தியில் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என நீங்கள்நன்கு அறிவீர்கள். ஜம்மு - காஷ்மீர் மாநில பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து ஆழ்ந்த கவலையாக உள்ளது. தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த அடைப்பினால் கடுமையான நடவடிக்கை, தடை மற்றும் ஊரடங்கு உத்தரவினால் இதில் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அதனால் நாங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளோம். தடுப்புக் காவலில் உள்ள பெண்களைப் பற்றியும், அவர்களின் காணாமல் போனபிள்ளைகள், கணவர்கள், தந்தைகள் பற்றியும் சரியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.பெண்களின் உரிமைக்கான அமைப்புகளும், மாநில பெண்கள்ஆணையமும் கடந்த பத்தாண்டுகளாகச்செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், தற்போது நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையின் அழுத்தமான தேவைகளைப் நிச்சயமாக பூர்த்தி செய்ய முடியும். நீங்கள் (மகளிர் ஆணையங்கள்) குழுக்களாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வர வேண்டும் என நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இங்கு தடுப்புக் காவலிலுள்ள பெண்கள்- அவர்களின் நிலை பற்றி பார்வையிடுங்கள். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிராந்தியங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த பெண்களுடன் பேசுங்கள். அவர்களின் குரல்கள், கவலைகள் மற்றும் சாட்சியங்களைக் கேளுங்கள். உங்களின் ஆய்வுகள் மற்றும் அவர்களோடு ஏற்படும் பரஸ்பர தொடர்பு அடிப்படையில் உண்மை கண்டறியும் அறிக்கையை வெளியிடுங்கள். இது முற்றிலும், இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவும், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் வசிப்பவராகவும் நான் விடுக்கும் உதவிக்கான அழைப்பு ஆகும்.” இவ்வாறு இல்டிஜா முப்தி குறிப்பிட்டுள்ளார்.