புதுதில்லி:
ஜனநாயக உரிமைகள் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா சரிவைச் சந்தித்துள்ளது. ‘குறைபாடான ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் நாடு’ என்ற அவப்பெயரையும் இந்தியா பெற் றுள்ளது. பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பொருளாதார புலனாய்வுப் பிரிவு, ‘தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்’ (Economist Intelligence Unit - EIU) ஆகும்.இந்த அமைப்பு, உலக நாடுகள் கொண்டிருக்கும் தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் குடிமைச் சமூக உரிமைகள் ஆகிய ஐந்து அம்சங்களை ஆராய்ந்து, அதன்படி சிறந்த ஜனநாயகஉரிமைக் குறியீடுகளைக் கொண்ட நாடுகளை ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்துவது வழக்கமாகும்.
8 புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண் பெறும் நாடுகள் ‘முழு ஜனநாயகம்’ கொண்டவை; 6 முதல் 8 சதவிகிதம் வரைமதிப்பெண் பெறும் நாடுகள் குறைபாடானஜனநாயகம் கொண்டவை; 4 முதல் 6 சதவிகிதம் வரை மதிப்பெண் பெறும் நாடுகள்; ‘கலப்பின ஆளுகை’ கொண்டவை; 4-க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றால்,அவை சர்வாதிகாரம் நிலவும் நாடுகள் என்று தரவரிசை அமையும்.இந்த அடிப்படையில், ‘தி இகனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட்’ அமைப்பானது, 2019-ஆம் ஆண்டில், 167 நாடுகளை ஆய்வு செய்து, உலக நாடுகளின் ஜனநாயக உரிமைக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதில், 2018-ஆம் ஆண்டில் 41-ஆவதுஇடத்திற்கு முன்னேறியிருந்த இந்தியா 2019-இல் 51-ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த முறை 7.23 மதிப்பெண்களைப் பெற்றிருந்த இந்தியா, 2019-இல் 6.90 மதிப்பெண்களைப் பெற்று, ‘குறைபாடுள்ள ஜனநாயகம்’ என்ற பெயரை எடுத்துள்ளது.370 சட்டப்பிரிவின் படியான, காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகள் நீக்கம், மாதக்கணக்கில் இணையதள முடக்கம், அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறை வைப்பு, மத அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்படுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) மற்றும் அவற்றுக்கு எதிரான மக்களின் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களே இந்த பின்னடைவுக்குக் காரணம் என்று ‘தி இகனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட்’ கூறியுள்ளது.
மேலும், பட்டியலில் இலங்கை, (69-வது இடம்), வங்காளதேசம் (80-ஆவது இடம்) ஆகிய நாடுகளை இந்தியா நெருங்கியுள்ளது. பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவுக்கு வெகுதூரத்தில் 104-ஆவது இடத்தில் உள்ளது.நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, பின்லாந்து, அயர்லாந்து, டென்மார்க், கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் 10 இடங்களைப் பெற்று, ஜனநாயக உரிமைக் குறியீட்டில் முன்னணி வகிக்கின்றன.