tamilnadu

img

தனியார்மயம் ஆக்குவதற்கான முடிவு... 8 லட்சம் காலிப் பணியிடங்கள் கைகட்டி நிற்கும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்

புதுதில்லி:
நியமனம் இல்லாமல் மத்திய அரசு துறைகளில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐந்தில் ஒரு பதவி காலியாக உள்ள நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலையின்மை 24 சதவிகிதமாக உயர்ந்துள்ள நிலையில், நியமனங்களை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் 2018 மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி 6.83 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக கூறினார். தற்போதைய காலியிடங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 2019, 2020ஆம் ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும்மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த இடங்களில் யாரும் நியமிக்கப் படவில்லை.
வருவாய்த் துறையில் பாதியளவு பதவிகள் காலியாக உள்ளன. சிவில் மற்றும் சுகாதாரத் துறைகளில் 30 சதவிகிதம், தபால் துறையில் 25 சதவிகிதம், ரயில்வேயில் 20 சதவிகிதம், உள்துறையில் 10 சதவிகிதம் காலியிடங்கள் உள்ளன. காலியாக உள்ள 3.5 லட்சம் பதவிகளுக்கான பணியாள்களை தேர்வு செய்வதை ரயில்வே சமீபத்தில் தடை செய்துள்ளது. மற்ற துறைகளில், சராசரியாக 25 சதவிகித பதவிகள் நிரப்பப்படவில்லை. 2014 ஆம் ஆண்டில், பாதுகாப்பு தவிர அனைத்து துறைகளிலும் 33 லட்சம் ஊழியர்கள் இருந்தனர்.பாதுகாப்புப் படையில் 14 லட்சம்பேர் உள்ளனர். பாதுகாப்புப் படைகளைத் தவிர்த்து அனுமதிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை 38 லட்சமாகும். 2018 ஆம் ஆண்டில் 31.17 லட்சம்பேர் வேலையில் இருந்தனர். 1994 ஆம் ஆண்டில், மத்திய அரசுப்பணிகள் நாட்டின் முறைசார் தொழிலாளர் படையில் 12.4 சதவிகிதத்தை வகித்தது. 

இப்போது அது எட்டு சதவிகி தத்திற்கும் குறைவாகவே உள்ளது. துணை ராணுவப் பிரிவுகள் உட்பட உள் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 2006 உடன் ஒப்பிடும்போது 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது, மற்ற எல்லா துறைகளிலும் இது குறைந்துள்ளது.அதே நேரத்தில், ஒப்பந்தம் மற்றும் தற்காலிக நியமனங்கள் பரவலாக உள்ளன. மத்திய அரசு துறைகளில் 3 லட்சம் ஒப்பந்த ஊழியர்கள்பணியாற்றுகின்றனர். எந்தவொரு விதிமுறையையும் பின்பற்றாமல் இந்தஒப்பந்த நியமனங்கள் செய்யப்படு கின்றன. ஓய்வு பெற்றவர்களும் தினசரி கூலிக்கு வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

வேலைவாய்ப்பை அகற்ற தனியார்மயமாக்கல்
பொதுத்துறை நிறுவனங்களை பெருமளவில் தனியார்மயம் ஆக்குவதற்கான முடிவு பெரிய அளவில் வேலைவாய்ப்பை ஒழிக்கும். நிறுவனங்களில் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர் என்பதே மத்தியஅரசின் ‘கண்டுபிடிப்பு’. தனியார் துறையில் நியமனங்கள் இடஒதுக்கீட்டிற்கு உட்பட்டவை அல்ல. நிலைமை என்னவென்றால், ஆட்சேர்ப்பு முகமை களான எஸ்.எஸ்.சி மற்றும் யு.பி.எஸ்.சி ஆகியவை தேவையற்றவையாக மாற்றப்படுகின்றன. இந்த ஆட்சேர்ப்பு முகமைகளில் உள்ள காலியிடங்களும் நிரப்பப்படவில்லை.