புதுதில்லி:
ஞாயிற்றுக் கிழமை, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இருண்ட நாள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக்குழுத் தலைவர் எளமரம் கரீம் சாடினார். ஞாயிறு அன்றுமாநிலங்களவையில் நடைபெற்ற மோசமான நடவடிக்கைகள் குறித்து எளமரம் கரீம் கூறியிருப்ப தாவது:
ஞாயிற்றுக் கிழமை இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஓர் இருண்ட நாள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களான எங்களுக்கு அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உரிமைகள் மறுக்கப்பட்டிருக் கின்றன. பாஜக அரசாங்கமும், மாநிலங்களவைத் துணைத் தலைவரும் அனைத்து நாடாளுமன்ற ஒழுங்குமுறை விதிகளையும் மறுத்துள்ளனர், மீறியுள்ளனர்.விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய -விவசாயி கள் சம்பந்தமான சட்டமுன்வடிவுகளின் மீது, வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரியபோது, அந்த உரிமை எங்களுக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவரால் மறுக்கப்பட்டது. இந்தச் சட்டமுன்வடிவுகளை எங்கள் எதிர்ப்புக் குரல்களைக் கண்டுகொள்ளாமலேயே பாஜகவின் ஆதரவை மட்டுமே கணக்கில் கொண்டு அவர் நிறைவேற்றி இருக்கிறார்.
அவர் மேற்கொண்ட நடவடிக்கை, அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது, மாநிலங்களவை யின் நடைமுறை விதிகளை மீறிய செயலாகும். நாங்கள் எங்கள் எதிர்ப்பினை நாடாளுமன்றக் கூடத்தில் எழுப்பினோம். மாநிலங்களவைத் துணைத் தலைவருக்கு எதிராக, நம்பிக்கையில்லா அறிவிப்பு கொடுத்திருக்கிறோம்.மோடி அரசாங்கத்தின் இத்தகைய ஜனநாயக விரோத அணுகுமுறையை தொடர்ந்து நாங்கள் எதிர்த்திடுவோம்.இவ்வாறு எளமரம் கரீம் கூறினார்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 பேர் சஸ்பெண்ட்
மாநிலங்களவை மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும்வரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஞாயிறு அன்று நாடாளுமன்ற நடத்தைக்கு விரோதமாக நடந்துகொண்டார்கள் என்று கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன், தோலா சென், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.கே.ராகேஷ், எளமரம் கரீம், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சாதவ், சையது நஷீர் உசேன் மற்றும் ரிபின் போரா ஆகிய எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். முன்னதாக ஞாயிறன்று விவசாய சட்டமுன்வடிவுகளை மாநிலங்களவைத் துணைத் தலைவர்
ஹரிவன்ஷ் நிறைவேற்றிய விதம் குறித்து எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு அனுமதிக்கவில்லை. இத்தகைய தீர்மானத்திற்கு 14 நாட்கள் அவகாசத்துடன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
எதிர்க்கட்சியினர் போராட்டம்
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியான முறையில் மகாத்மா காந்தி சிலை முன்பு தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்தார்கள். திங்களன்று மாநிலங்களவை கூடியதும் எட்டு பேரையும் சஸ்பெண்ட் செய்ததற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளர்ச்சி செய்ததால், முதலில் அவை ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளியேற மறுத்ததால், அவை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கூடியது.கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமான முறையில் பரவி வருவதால், அவை செப்டம்பர் 23உடன் முடித்துக்கொள்ளப்படுகிறது.
இடைநீக்கம் எங்களை மவுனப்படுத்திவிடாது: கரீம்
சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் எளமரம் கரீம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இடைநீக்கம் எங்களை மவுனப்படுத்திவிடாது. விவசாயிகள் மேற்கொண்டிருக்கும் போராட்டத்தில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் நிற்போம். ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவைத் துணைத்தலைவர் நாடாளுமன்ற நடைமுறையின் கழுத்தை நெறித்துவிட்டார். மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பாஜக-வின் கோழைத்தன முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. அவர்களின் ஜனநாயகவிரோத நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.